ஒழுக்கத்திற்கு அதிபதி குரு பகவான்
- ஆலங்குடி மற்றும் திட்டை திருத்தலங்கள் குருபகவானுக்கு உரிய தலங்களாகும்.
- குருவுக்கு உரிய வஸ்திரம், தானியம் கொண்டு வழிபடுதல் நல்லது.
ஒரு ஜாதகத்தில் குரு கெட்டுப் போயிருந்தால், அந்த ஜாதகர் ஒழுக்க நெறிகளைக் கைவிடுதல், பெரியோர் சொல் கேளாமை, தெய்வ நிந்தனை, உறவினருடன் பகை, பொய் கூறல் போன்ற செயல்களில் ஈடுபடுவார்.
தீய பலன்கள் குறையவும், நல்ல பலன்கள் அளவுக்கு அதிகமாக நடைபெறவும் குரு பகவானுக்கு செய்யும் பரிகார முறைகள் உதவும்.
வியாழனன்று குரு ஓரையில் நல்ல நேரத்தில் குருவிற்கு உரிய கோலத்தை வடகிழக்கு திசையில் வரைந்து, அதன் மேல் முல்லை மலர்கள் பரப்பிக் குரு யந்திரத்தை வைத்து அதற்கு முல்லை மலர் சூட்டி சந்தனப் பொட்டிட்டுப் பொன்னிறத்தட்டில் கடலை வைத்துத் தூப தீபம் காட்டிக் குரு காயத்ரியை 108 முறை மன ஒருமையுடன் கூறினால் குருவால் ஏற்பட்ட தீய பலன்கள் விலகும்.
நல்ல பலன்கள் மேலும் மேலும் அதிகரிக்கும்.
வியாழக்கிழமையன்று வீட்டில் நெய் தீபம் ஏற்றி வழிபடுதல், குருவுக்கு உரிய வஸ்திரம், தானியம் கொண்டு வழிபடுதல் நல்லது.
வியாழனன்று குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மஞ்சள் நிற ஆடை அணிவித்து புஷ்பராகம் வெண் முல்லை மலர்களால் அலங்கரித்து குருவுக்குரிய மூல மந்திரத்தினை ஓதி, அரச சமித்தினால் வேள்வி செய்து, கடலை பொடி அன்னத்தால் ஆகுதி செய்து, அஷ்டோத்திர அர்ச்சனை தூப தீப நெய்வேத்தியம் ஆகியவற்றைச் செய்து அடானா ராகத்தில் குருவுக்குரிய கீர்த்தனைகளைப் பாடி வணங்கக் குருக் கிரக தோஷம் நீங்கும்.
மஞ்சள் நிற ஆடையை உடுத்துவது புஷ்பராகமணியை அணிவது, மஞ்சள் நிற ஆடை, கடலை தானியம் ஆகியவற்றைத் தானம் செய்வது வியாழக்கிழமை களில் விரதங்களை மேற்கொள்வது ஆகியவற்றால் குரு தோஷப் பரிகாரங்களைச் செய்யலாம்.
எட்டுத் திசைகளுள் வடகிழக்கு எனப்படும் ஈசான்ய திசையே வியாழனுக்குரிய திசையாகக் கருதப்படுகின்றது.
ஆலங்குடி மற்றும் திட்டை திருத்தலங்கள் குருபகவானுக்கு உரிய தலங்களாகும்.
இங்கு சென்று வழிபட்டு வருவது நன்மை தரும்.