வீரபத்திரருக்கு சந்தனம் அரைக்கும் முறை!
- இதுவே “வீரபத்திரர் உபாசகர்” என்ற தனித் தகுதியைக் காட்டும் அடையாளமாகும்.
- வீரபத்திரர் சுத்தத்தை விரும்பும் தெய்வம் ஆவார்.
வீரபத்திரருக்கு சந்தனம் அரைக்கும் முறை
வீரபத்திரர் சுத்தத்தை விரும்பும் தெய்வம் ஆவார். எனவே அவருக்கு மூச்சுக்காற்று கூடப் படாத அளவிற்கு மிகத் தூய்மையுடன் சந்தனம் அரைக்க வேண்டும்.
மிகக்கெட்டியாக அரைத்த சந்தனக் குழம்பினை வலது கையின் நடுவிரலால் எடுத்து வெள்ளிக் கிண்ணத்தில் சேமிக்க வேண்டும்.
அதனை 108, 1008 என்ற எண்ணிக்கையில் சிறுசிறு உருண்டைகளாக உருவாக்க வேண்டும்.
சந்தனத்தை அரைக்கும்போதும், உருண்டைகள் ஆக்கும்போதும் மூச்சினை இழுத்துப் பிடித்துக் கொண்டு செயல்பட வேண்டும்.
இவ்வாறு அரைத்த சந்தன உருண்டைகளால் உடல் சுத்தி, கர சுத்தி, தியானம், மூலம் பூரண மந்திரங்களை கூறி அர்ச்சிக்க வேண்டும்.
வீரபத்திரருக்குரிய யந்திரத்தின் முன்பாக சந்தன மரப்பெட்டி வைத்து, மந்திரம் கூறி, 108 சந்தன உருண்டைகளை அர்ச்சித்து முடிந்தவுடன் அவற்றை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்க வேண்டும்.
இங்ஙனம் 1008 கிண்ணங்களில், பூசித்த சந்தன உருண்டைகளைச் சேர்த்து வைக்க வேண்டும்.
இவ்வகையில் மூன்று லட்சம் சந்தன உருண்டைகளை மந்திர உருவேற்றி, ஓதி முடித்தவுடன் அவற்றை சந்தன மரப்பெட்டியில் மிகக் கவனமாக எடுத்து வைக்க வேண்டும்.
ஸ்ரீவீரபத்திரரை உபாசிப்போர் எக்காரணம் கொண்டும் தங்களது தனிப்பட்ட பணிகளுக்காகவோ வேண்டுதல்களுக்காகவோ மேற்படி சந்தன உருண்டைகளைப் பயன்படுத்துதல் கூடாது.
சந்தன உருண்டைகளை அரைக்கும் பொழுதோ பூஜிக்கும் பொழுதோ எத்தகைய தனிப்பட்ட வேண்டுதல்களோ, சுயநல எண்ணங்களோ, விருப்பு வெறுப்புகளோ இல்லாமல் தூய்மையான மனதுடன் பக்தியுடன் செயல்படுதல் வேண்டும்.
இப்படி மூன்று லட்சம் சந்தன உருண்டைகளால் பூஜை செய்தவர் தன் வலக்கர மணிக்கட்டில் கறுப்புக் கயிற்றினை அணிய வேண்டும்.
இதுவே "வீரபத்திரர் உபாசகர்" என்ற தனித் தகுதியைக் காட்டும் அடையாளமாகும்.
இப்படி பூஜை செய்தோர் மட்டுமே வீரபத்திரருக்குத் திருமஞ்சனம், அலங்காரம், அர்ச்சனை, ஆரத்தி எடுக்கத் தகுதியானவர்கள்.
பிறர் இவற்றைச் செய்தல் கூடாது.
இந்த தகவல்களை வீரபத்திரர் மகிமை என்ற நூலில் அருணாசல சத்குரு ஸ்ரீவேங்கடராம சுவாமிகள் குறிப் பிட்டுள்ளார்.