வரவு அறிந்து செலவு செய்ய நினைக்கும் மேஷ ராசி நேயர்களே!
ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய், விரயாதிபதி குருவுடன் சேர்ந்து தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே விரயத்திற்கேற்ற லாபம் வந்து கொண்டேயிருக்கும்.
சனியின் பார்வை உங்கள் ராசியில் பதி வதால் உங்களுக்கோ, உங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கோ உடல்நலக் குறைபாடும், அதனால் மருத்துவச் செலவும் ஏற்படலாம். இனம்புரியாத கவலை உருவாகும். சனி - சூரியன் பார்வையால் பிள்ளைகள் வழியில் பிரச்சினைகளும், விரயங்களும் உருவாகலாம்.
சனி- சூரியன் பார்வை
கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி, இம்மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். சிம்மத்தில் சஞ்சரிக்கும் சூரியன் அவரைப் பார்க்கிறார். பகைக் கிரகங்களின் பார்வை அவ்வளவு நல்லதல்ல. அதிலும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியனும், லாப ஸ்தானத்தில் சனியும் இருப்பதால் பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் தாமதம் ஏற்படும்.
அவர் களுக்கான சுபகாரியங்கள் பலவும் நடைபெறுவது போல் வந்து கைநழுவிச் செல்லும். பாகப்பிரிவினை முடிவடையாமல் போகலாம். அண்ணன், தம்பிகளுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீதிமன்றம் வரை செல்ல வாய்ப்புண்டு. பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு நல்ல பொறுப்புகளில் இருந்து மாற்றம் ஏற்படும் சூழல் அமையும்.
சுக்ரன் நீச்சம்
ஆவணி 10-ந் தேதி, கன்னி ராசிக்குச் செல்லும் சுக்ரன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு தன - சப்தமாதிபதியான சுக்ரன் வலிமை இழக்கும் இந்த நேரத்தில், பொருளாதார பற்றாக்குறை ஏற்படும். வாங்கிய கடனைக் கொடுக்க முடியாமலும், கொடுத்த கடனை வசூலிக்க முடியாமலும் திணறுவீர்கள். குடும்ப ஒற்றுமை குறையும்.
குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும், உங்களிடம் கேட்காமலேயே முடிவெடுத்து காரியங்களை செய்யத் தொடங்குவர். அதன் விளைவாக சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். 'நினைத்தது நிறைவேறவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். வந்த வரன்கள் கைநழுவிச் செல்லும். இக்காலத்தில் யாருடனும் பகைமை பாராட்ட வேண்டாம்.
மிதுன - செவ்வாய்
ஆவணி 10-ந் தேதி, மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். இதன் விளைவாக முக்கியப் புள்ளிகளின் சந்திப்பும், அதனால் முன்னேற்றமும் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த குறுக்கீடு அகலும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகி மகிழ்ச்சியைத் தரும். உடன் பிறப்புகள் உங்கள் எண்ணங்களைப் புரிந்து கொண்டு செயல்படுவர். உத்தியோகத்தில் இனிமை தரும் விதத்தில் இடமாற்றம் வந்துசேரும். கடன்சுமை பாதிக்கு மேல் குறையும். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர்.
சிம்ம - புதன்
ஆவணி மாதம் 15-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அடியெடுத்து வைப்பது நல்ல நேரம்தான். வெற்றிகள் ஸ்தானத்திற்கு அதிபதியான புதன், பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வரும்பொழுது மதிப்பும், மரியாதையும் கூடும். மக்கள் செல்வங் களால் மேன்மை உண்டு. எதிர்கால நலன் கருதி நீங்கள் எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
அரசியல் களத்தில் இருப்பவர்களுக்கு மேலிடத்து ஆதரவு உண்டு. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் சாதகமாக அமையும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர் களுக்கு, தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் முயற்சி கைகூடும். கலைஞர் களுக்கு செல்வாக்கு மேலோங்கும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் பணியாற்றும் நிலை உருவாகும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சு முடிவாகும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஆகஸ்டு: 17, 18, 21, 27, 31, செப்டம்பர்: 1, 12, 13, 14.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.