பிறருடைய பிரச்சினைகளுக்கு நல்ல வழி கூறும் மேஷ ராசி நேயர்களே!
பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்க நாளிலேயே உங்கள் ராசிநாதன் செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக் கிறார். அவரோடு லாபாதிபதி சனியும், தன - சப்தமாதிபதி சுக்ரனும் இணைந்திருக்கிறார்கள். எனவே பொருளாதார நிலை உயரும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். ஜென்ம குருவின் ஆதிக்கத்தால் இடமாற்றம், வீடு மாற்றம் நிகழக்கூடிய வாய்ப்பு உண்டு.
செவ்வாய் -சனி சேர்க்கை
மாதத்தின் முதல் நாளிலேயே செவ்வாய், கும்ப ராசிக்குச் செல்கிறார். அவர் அங்கு லாபாதிபதி சனியோடு சேர்ந்து மாதம் முழுவதும் சஞ்சரிக்கிறார். இந்த முரண்பாடான கிரகச் சேர்க்கை அவ்வளவு நல்லதல்ல. எதிர்காலத்தைப் பற்றிய பயம் அதிகரிக்கும். எதிலும் துணிந்து செயல்பட இயலாது. எவ்வளவு பணம் வந்தாலும் உடனுக்குடன் செலவாகி மனக்கலக்கத்தை உருவாக்கும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் இந்த நேரத்தில், கூட்டாளிகள் தங்களுக்குரிய பங்கைப் பிரித்துக் கேட்பதால் அச்சம் ஏற்படும். மற்றவர்களை நம்பி செயல்பட முடியாது. பழைய கடன்களை அடைக்க எடுத்த முயற்சிகள் கைகூடும். என்றாலும் புதிய கடனும் வாங்குவீர்கள்.
உத்தியோகத்தில் அதிகாரிகள் மற்றும் சகப் பணியாளர்களின் ஆதரவு குறையும். இதனால் வாக்குவாதங்கள் ஏற்பட்டு 'விருப்ப ஓய்வில் வெளிவரலாமா?' என்று கூட சிந்திப்பீர்கள். இதுபோன்ற காலங்களில் செவ்வாய் மற்றும் சனிக்குரிய சிறப்பு வழிபாடுகளை, யோகபலம் பெற்ற நாட்களில் செய்வது நல்லது. கும்பத்தில் தன - சப்தமாதி சுக்ரனும் இருப்பதால் சுபச் செலவுகளை மேற்கொண்டால் வீண் விரயங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
புதன் வக்ரம்
நீச்ச வீடான மீனத்தில் சஞ்சரிக்கும் புதன், பங்குனி 13-ந் தேதி வக்ரம் பெறுகிறார். ஏற்கனவே நீச்சம் பெற்று சஞ்சரிக்கும் புதன் இப்பொழுது வக்ரம் பெற்று வலிமை இழப்பது யோகம்தான். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம்' என்பதற்கேற்ப, நல்ல பலன்கள் நடை பெறும். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதனால், சகோதர ஒற்றுமை பலப்படும். புதிய உத்தியோக முயற்சி கைகூடும். கடன் சுமை குறையும். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும். புதிய பங்குதாரர்களால் பொருளாதாரம் உயரும்.
மீனம் - சுக்ரன்
பங்குனி 19-ந் தேதி, மீன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அது சுக்ரனுக்கு உச்ச வீடாகும். அவர் அங்குள்ள புதனோடு இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குகிறார். மேலும் அங்குள்ள சூரியனோடு இணைவதால் 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகிறது. எனவே இக்காலம் ஒரு பொற்காலமாகவே அமையும். தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். தொல்லை கொடுத்தவர்கள் விலகுவர். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குல தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். வாக்கு வன்மையால் புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். உத்தியோகத்தில் நல்ல பொறுப்புகள் கிடைக்கும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு செல்வாக்கு உயரும். செயல்பாட்டில் வெற்றி கிடைக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் வரலாம். உத்தியோகத்தில் உள்ளவர் களுக்கு உயர் பதவி உண்டு. மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும். கலைஞர்களுக்கு சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். மாணவ - மாணவிகளுக்கு சிந்தனையில் தெளிவு பிறக்கும். பெண்களுக்கு குடும்ப ஒற்றுமை பலப்படும். பணத்தேவை பூர்த்தியாகும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
மார்ச்: 15, 16, 20, 21, ஏப்ரல்: 1, 2, 6, 7.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.