மேஷம் - தமிழ் மாத ஜோதிடம்

2024 மார்கழி மாத ராசிபலன்

Published On 2024-12-15 02:41 GMT   |   Update On 2024-12-15 02:43 GMT

நேர்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மேஷ ராசி நேயர்களே!

மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். அஷ்டமாதிபதியாகவும் செவ்வாய் விளங்குவதால், அவர் வக்ரம் பெறுவது நன்மைதான். சென்ற மாதத்தில் தேங்கிய சில காரியங்கள் இப்பொழுது துரிதமாக நடைபெறும். தொழில் ஸ்தானத்தில் குரு பார்வை பதிவதால், தொழில் முன்னேற்றம், புதிய ஒப்பந்தங்களில் லாபம் ஏற்படும். அதே நேரம் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் தேவை. உத்தியோகத்தில் உங்களுக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.

செவ்வாய் - சுக்ரன் பார்வை

மாதத் தொடக்கத்தில் கடகத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய், மகரத்தில் சஞ்சரிக்கும் சுக்ரனை சப்தம பார்வையாகப் பார்க்கிறார். கும்ப ராசிக்கு சுக்ரன் சென்றபிறகும், அவரை அஷ்டமப் பார்வையாக செவ்வாய் பார்க்கிறார். எனவே இந்த மாதம் முழுவதுமே செவ்வாய் - சுக்ரன் பார்வை இருக்கிறது. உங்கள் ராசிக்கு தனம், குடும்பம், களத்திரம் ஆகியவற்றிற்கு அதிபதியானவர் சுக்ரன். அவரை மங்களகாரகனான செவ்வாய் பார்ப்பதால், குடும்பத்தில் மங்கல ஓசை கேட்க வழிபிறக்கும். புத்திரப் பேறுக்காகக் காத்திருக்கும் தம்பதிக்கு நல்ல தகவல் கிடைக்கும். குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சம்பாதிக்கும் சூழ்நிலையும், பொருளாதாரத்தில் நிறைவும் ஏற்படும். தங்கம், வெள்ளி மற்றும் ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு.

குரு வக்ரம்

உங்கள் ராசிக்கு விரயாதிபதியாகவும், பாக்கியாதிபதியாகவும் விளங்கும் குரு, இந்த மாதம் முழுவதும் வக்ரம் பெறுகிறார். எனவே நன்மையும், தீமையும் கலந்த பலன்களே நடைபெறும். குறிப்பாக விரயாதிபதி வக்ரம் பெறுவதால் விரயத்திற்கேற்ற வரவு வந்து கொண்டேயிருக்கும். அதே நேரம் பெற்றோர் வழியில் சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

'பெற்றோர் தன்னிடம் காட்டும் பாசத்தைவிட மற்ற சகோதரர்களிடம் காட்டும் பாசம் அதிகமாக இருக்கின்றதே' என்று கவலைப்படுவீர்கள். உடன்பிறப்பு களின் அனுசரிப்பு குறையலாம். யோசித்து செயல்பட வேண்டிய நேரம் இது.

கும்ப - சுக்ரன்

மார்கழி 15-ந் தேதி, கும்ப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும்பொழுது பொருளாதார நிலை உச்சத்தை எட்டும். கொடுக்கல் - வாங்கலில் சரளநிலை உருவாகும்.

கைமாற்றாகவோ, கடனாகவோ வாங்கிய தொகையைக் கொடுத்து மகிழ்வீர்கள். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்துசேரும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு தானாகவே வரலாம்.

தனுசு - புதன்

மார்கழி 17-ந் தேதி, தனுசு ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் 9-ல் சஞ்சரிக்கும் போது, ஒளிமயமான எதிர்காலத்திற்கு வித்திடும். பயணங்களால் பலன் கிடைக்கும். புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு. வியாபாரத்தில் தள்ளிப்போன ஒப்பந்தங்கள் இப்பொழுது தானாக வந்துசேரும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்துசேரும்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நெருக்கடி நிலை அகலும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு புதிய முதலீடுகள் செய்யும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். கலைஞர்களுக்கு வருமானம் உயரும். மாணவ-மாணவி களுக்கு கல்வி முன்னேற்றம் உண்டு. பெண்களுக்கு குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

டிசம்பர்: 18, 19, 30, 31, ஜனவரி: 4, 5, 9, 10, 11.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.

Similar News