மேஷம் - தமிழ் மாத ஜோதிடம்

ஆடி மாத ராசிபலன்

Published On 2024-07-17 02:54 GMT   |   Update On 2024-07-17 02:55 GMT

எதையும் உற்சாகத்தோடு செய்யும் மேஷ ராசி நேயர்களே!

ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் தன ஸ்தானத்தில் குருவோடு இணைந்து சஞ்சரிக்கிறார். இதனால் 'குரு மங்கள யோகம்' ஏற்படுகிறது. எனவே இந்த மாதத்தில், நல்ல காரியங்கள் பலவும் இல்லத்தில் நடைபெற வழிபிறக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். குடும்ப ஒற்றுமை பலப்படும். அடுத்தடுத்து நல்ல காரியங்கள் நடைபெறுவதோடு, பொருளாதார வளர்ச்சியும் கூடும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் மாதம் இது.

குரு - செவ்வாய் சேர்க்கை

உங்கள் ராசிநாதன் செவ்வாய், இந்த மாதம் முழுவதும் விரயாதிபதி குருவோடு இணைந்து தன ஸ்தானத்தில் சஞ்சரிக் கிறார். எனவே விரயத்திற்கேற்ற தனவரவு வந்து கொண்டே இருக்கும். குடும்பத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான சூழல் உருவாகும். தங்களுக்கோ, தங்கள் குடும் பத்தைச் சார்ந்தவர்களுக்கோ, திருமண வயதடைந்த தங்கள் பிள்ளைகளுக்கோ வரன் பார்த்துக் கொண்டிருந்தால் அந்த காரியம் நல்ல படியாக முடியும். 'இடம், பூமி வாங்க வேண்டும், வீடுகட்ட வேண்டும்' என்று நினைத்தவர்களுக்கு அது கைகூடும். சொத்துக்களால் லாபம் கிடைக்கும் நேரம் இது.

புதன்-வக்ரம்

ஆடி 5-ந் தேதி கடக ராசியில் சஞ்சரிக்கும் புதன், ஆடி 28-ந் தேதி வரை அங்கு வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். எனவே இக்காலத்தில் சகோதர ஒற்றுமை கொஞ்சம் குறையலாம். உடன்பிறப்புகள் உங்கள் குண மறிந்து நடந்துகொள்ள மாட்டார்கள். உத்தியோகத்தில் சில பிரச்சினைகள் தலைதூக்கும். வேலைப்பளு கூடும். மேலதிகாரிகள், உங்கள் மீது கூடுதல் பொறுப்புகளை சுமத்தலாம். கொடுக்கல் - வாங்கலில் சில பாக்கிகள் மனதை உறுத்தும். அதே நேரத்தில் கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சிகள் கைகூடலாம். அரசியல் களத்தில் உள்ளவர்களுக்கு அதிகார யோகம் உண்டு.

சிம்ம - சுக்ரன்

ஆடி 16-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வரும்பொழுது, மிகுந்த யோகம் தரும். படித்து முடித்து வேலை இல்லாமல் இருக்கும் பிள்ளைகளுக்கு, இப்பொழுது வேலை கிடைத்து உதிரி வருமானங்கள் வந்துசேரும். ஆன்மிகச் சிந்தனை அதிகரிக்கும். புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வர நினைப்பீர்கள். அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் சுக்ரனின் ஆதிக்கத்தால், சொத்து விற்பனையும், அதன் மூலம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபமும் கிடைக்கும்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்குப் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு கூட்டுமுயற்சி பலன் தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டு. கலைஞர்களின் செல்வாக்கு உயரும். மாணவ-மாணவிகள் எதிர்பார்த்த இலக்கை அடைவர். பெண் களுக்கு குடும்பச்சுமை கூடும். விரயங்கள் அதிகரிக்கும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

ஜூலை: 19, 20, 24, 25, 31, ஆகஸ்டு: 1, 4, 5, 16.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- இளஞ்சிவப்பு.

Similar News