கடகம் - தமிழ் மாத ஜோதிடம்

2024 கார்த்திகை மாத ராசிபலன்

Published On 2024-11-15 07:58 IST   |   Update On 2024-11-15 08:00:00 IST

எதையும் திட்டமிட்டுச் செய்து வெற்றி காணும் கடக ராசி நேயர்களே!

கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்திலேயே உங்கள் ராசியில் செவ்வாய் நீச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். அஷ்டமத்துச் சனி வக்ர நிவர்த்தியாகி வலு வடைந்திருக்கிறது. எனவே எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது.

திடீர் திடீரென விரயங்கள் வந்து ஆட்கொள்ளும். ஒரு தொகை செலவழிந்த பின்னரே அடுத்த தொகை உங்கள் கைக்கு வரும். நல்ல சந்தர்ப்பங்களை நழுவவிடும் சூழல் உருவாகும். இதுபோன்ற நேரங்களில் எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்துச் செய்வது நல்லது.

குரு வக்ரம்

ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான், இந்த மாதம் முழுவதும் வக்ரம் பெற்றிருக்கிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குரு, வக்ரம் பெறும்பொழுது உத்தியோகத்தில் திடீர் மாற்றம் வரலாம். நீங்கள் நினைத்த பொருள் கிடைக்காமல் போகலாம். நீண்ட நாளைக்கு முன் தோன்றி மறைந்த நோய், மீண்டும் தலைதூக்கலாம்.

உத்தியோகத்தில் அனைத்துப் பொறுப்புகளையும் தன்வசம் வைத்திருப்பவர்கள், மிக கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது. வீண்பழி வரும் வாய்ப்பு அதிகம். அதே நேரத்தில் குரு, உங்கள் ராசிக்கு 9-ம் இடத்திற்கும் அதிபதி என்பதால், பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் தலைதூக்கும். எதிரிகளின் தொல்லை களால் மனக்கவலை அதிகரிக்கும்.

சனி - செவ்வாய் பார்வை

கடகத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய், இந்த மாதம் முழுவதும் கும்பத்தில் உள்ள சனியைப் பார்க்கிறார். அதே நேரம் அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கமும் உள்ளது. இதில் செவ்வாய் பார்வையும் இருப்பது அவ்வளவு நல்லதல்ல. உடல்நலத்தில் திடீர் திடீரென சீர்கேடுகளும், மருத்துவச் செலவுகளும் ஏற்படும். கடன்சுமை அதிகரிப்பும், கடமையில் தொய்வும் ஏற்படும் நேரம் இது.

உத்தியோகமானாலும், தொழிலாக இருந்தாலும் மனம் அதில் ஒருநிலைப் படாது. அடிக்கடி தடுமாற்றமும், இரட்டித்த சிந்தனையும் உருவாகும். வருமானம் ஒரு மடங்கு வந்தால் செலவு இருமடங்காக வந்துசேரும். மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டிய நேரம் இது.

மகர - சுக்ரன்

கார்த்திகை 18-ந்தேதி, மகர ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதி பதியானவர் சுக்ரன். அவர் சப்தம ஸ்தானத்திற்கு வருவது அற்புதமான நேரமாகும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. அதிகார வர்க்கத்தினரின் ஆதரவு கிடைக்கும். ஒளிமயமான எதிர்காலம் அமைய நண்பர்கள் உதவி செய்வர்.

செவ்வாய் வக்ரம்

கடக ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய், கார்த்திகை 18-ந் தேதி வக்ரம் பெறுகிறார். யோகம் செய்யும் கிரகம் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. தொழில் மாற்ற சிந்தனைகள் அதிகரிக்கும். நண்பர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம். பிள்ளைகளால் வரும் பிரச்சனைகளை சமாளிக்க வேண்டிய சூழல் உருவாகும். நரம்பு, எலும்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படலாம்.

வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு ஏட்டில் உள்ள லாபம் எளிதில் கிடைக்காது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சகப் பணியாளர்களால் தொல்லை உண்டு. கலைஞர்களுக்கு அதிக முயற்சியின் பேரில்தான் எதிலும் வெற்றி பெறமுடியும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் கவனம் தேவை. பெண்களுக்கு விரயங்கள் அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

நவம்பர்: 17, 18, 23, 24, டிசம்பர்: 10, 11, 14, 15.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

Similar News