கடகம் - தமிழ் மாத ஜோதிடம்

ஆனி மாத ராசிபலன்

Published On 2024-06-13 08:15 IST   |   Update On 2024-06-13 08:16:00 IST

கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்கும் கடக ராசி நேயர்களே!

ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 12-ம் இடமான விரய ஸ்தானத்தில் சூரியன், சுக்ரன், புதன் ஆகிய மூன்று கிரகங்களும் இணைந்து சஞ்சரிக்கின்றன. அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கமும் இருக்கிறது. எனவே இம்மாதம் மிகமிக கவனத்துடன் செயல்பட வேண்டிய மாதமாகும். வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. எதிர்காலத்தைப் பற்றிய பயம் ஏற்படும்.

சனி வக்ரம்

ஆனி 5-ந் தேதி, கும்ப ராசியில் சனி வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 7, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. அவர் வக்ரம் பெறும் இந்த நேரத்தில், குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக்கும். கொள்கைப் பிடிப்போடு செயல்பட இயலாது. கடுமையாக முயற்சித்தும் ஒரு சில காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடாமல் போகலாம். அதே நேரத்தில் அஷ்டமாதிபதியாகவும் சனி பகவான் விளங்குவதால், அதற்குரிய வக்ர காலத்தில் தடைபட்டு வந்த சில காரியங்கள் துரிதமாக நடைபெறும். சனியின் வழிபாடு சந்தோஷம் வழங்கும்.

கடக - புதன்

ஆனி 12-ந் தேதி, உங்கள் ராசிக்கு புதன் வருகிறார். அவர் உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். விரய ஸ்தானத்திற்கு அதிபதியான புதன், உங்கள் ராசிக்கு வரும் வேளையில் அனைத்து காரியங்களிலும் விரயங்கள் அதிகரிக்கும். நினைத்தது நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் நீண்ட தூரத்திற்கான மாறுதல்கள் கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு செயல்படுவது நல்லது. மாமன், மைத்துனர் வழியில் ஏற்படும் மங்கல நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். வெளிநாடு செல்வதில் இருந்த தடை அகலும்.

கடக - சுக்ரன்

ஆனி 23-ந் தேதி, உங்கள் ராசிக்கு சுக்ரன் வருகிறார். உங்கள் ராசிக்கு சுக - லாபாதிபதியான அவர், உங்கள் ராசிக்கே வருவது நன்மைதான். என்றாலும் அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் அல்லவா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே வியாபாரத்தில் பழைய கூட்டாளிகளால் பிரச்சினைகள் வரலாம். ஊதிய உயர்வு கிடைத்தாலும், கணவனும், மனைவியும் வேறு வேறு இடத்தில் பணிபுரியும் சூழல் உருவாகும். பணிபுரியும் இடத்தில் முக்கிய ஆவணங்களை கவனமுடன் பார்த்துக் கொள்ளுங்கள். பழைய ஆபரணங்களைக் கொடுத்துவிட்டு, புதிய ஆபரணங்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். அதே போல் பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டு, புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் கூடும்.

ரிஷப - செவ்வாய்

ஆனி 27-ந் தேதி, ரிஷப ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு யோகாதிபதியாக விளங்கும் செவ்வாய், லாப ஸ்தானத்திற்கு வருவது நன்மைதான். வருமானம் உயரும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். பெருமைக்குரிய சம்பவங்கள் ஏராளமாக நடைபெறும். புதியவர்களின் அறிமுகத்தால் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமிடுவீர்கள். இடம் வாங்குவது, மனை கட்டுவது போன்றவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். இக் காலம் ஒரு பொற்காலமாகும்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதையும் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. வியாபாரம், தொழில் செய்பவர் களுக்கு கூட்டாளிகளால் கவலை ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மாற்றங்களும், ஏற்றங்களும் வரலாம். கலைஞர்களுக்கு எதிர்பார்ப்புகள் தாமதப்படும். மாணவ- மாணவிகளுக்கு மறதி அதிகரிக்கும். பெண் களுக்கு கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட புதிய வழிபிறக்கும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

ஜூன்: 17, 18, 30, ஜூலை: 3, 4, 10, 16.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

Similar News