கடகம் - தமிழ் மாத ஜோதிடம்

2024 புரட்டாசி மாத ராசிபலன்

Published On 2024-09-17 13:50 IST   |   Update On 2024-09-17 13:51:00 IST

நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து பழகும் கடக ராசி நேயர்களே!

புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் சனி பகவான் சஞ்சரிக்கிறார். இது அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் என்றாலும், சனி பகவான் வக்ர இயக்கத்தில் இருப்பதால் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படாது.

இருப்பினும் சேமிப்புகள் குறையலாம். திடீர் இடமாற்றம், உத்தியோக மாற்றம் வரலாம். புதியவர்களை நம்பி செய்த காரியங்கள் முடிவடையாமல் போகலாம். சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து சனி பகவானை வழிபட்டால் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.

சனி வக்ரம்

கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 7, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. அஷ்டமாதிபதியான அவர் வக்ரம் பெறுவதால், அதன் கடுமை குறையும். அதேநேரம் சப்தமாதிபதியாகவும் சனி இருப்பதால், குடும்ப பிரச்சினைகள் அடிக்கடி தலைதூக்கும். நிழல் போல கடன் சுமை தொடரும்.

எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. திடீர் உடல்நலக்குறைவால் அவதிப்படுவீர்கள். தொழில் பங்குதாரர்கள் விலகுவதாக சொல்லி அச்சுறுத்துவர். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரத்தை வழங்கமாட்டார்கள். எதிரிகளின் பலம் அதிகரிக்கும் இந்த நேரத்தில், உங்கள் முன்னேற்றத்தை பற்றி மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

புதன் உச்சம்

புரட்டாசி 3-ந் தேதி, கன்னி ராசியில் புதன் உச்சம் பெறுகிறார். அவர், உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங் களுக்கு அதிபதியானவர். சகாய ஸ்தானாதிபதியான புதன் உச்சம் பெறுவது நல்ல நேரம்தான். என்றாலும் விரயாதிபதியாகவும் புதன் இருப்பதால், எதிர்பாராத விரயங்கள் வந்துசேரும்.

இது போன்ற காலகட்டத்தில், இல்லத்திற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது, இடம், பூமி வாங்குவது, கட்டிய மனையை பழுது பார்ப்பது, கல்யாண காரியங்களை முடிப்பது போன்ற சுப விரயங்களை மேற்கொள்ளுங்கள்.

துலாம் - சுக்ரன்

புரட்டாசி 3-ந் தேதி, துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அது சுக்ரனுக்கு சொந்த வீடாகும். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன் சுக ஸ்தானத்தில் பலம் பெற்று இருக்கும்போது, நல்ல காரியங்கள் பலவும் இல்லத்தில் நடைபெறும்.

தாய்வழி ஆதரவு திருப்தி தரும். பாகப்பிரிவினைகள், பஞ்சாயத்துக்கள் சாதகமாக அமையும். பக்கபலமாக இருக்கும் நண்பர்கள், உங்கள் பணத்தேவைகளைப் பூர்த்தி செய்வர். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் கிடைக்கும்.

துலாம் - புதன்

புரட்டாசி 20-ந் தேதி, துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். அவர் அங்குள்ள சுக்ரனோடு இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குகிறார். உங்கள் ராசிக்கு சகாய ஸ்தானாதிபதியான புதன் பலம்பெறும் இந்த நேரத்தில், தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். தொல்லைகள் அனைத்தும் விலகிச் செல்லும். தடைப்பட்ட காரியங்கள் ஒவ்வொன்றும் தானாக நடைபெறும்.

உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள், உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்வர். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் போட்டிகள் அகலும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்தபடியே இடமாற்றமும் கிடைக்கலாம். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புகழ் கூடும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

உத்தியோகத்தில் உள்ளவர்கள், உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவர். கலைஞர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மாணவ - மாணவிகள் படிப்பில் அக்கறை காட்டுவர். பெண்களுக்கு, தங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. குடும்பச் சுமை கூடும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

செப்டம்பர்: 19, 23, 24, 30, அக்டோபர்: 1, 5, 6, 16, 17.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.

Similar News