கடகம் - தமிழ் மாத ஜோதிடம்

பங்குனி மாத ராசிபலன்

Published On 2024-03-13 10:20 IST   |   Update On 2024-03-13 10:21:00 IST

நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளும் கடக ராசி நேயர்களே!

பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சந்திரன், குருவுடன் இணைந்து 'குரு சந்திர யோக'த்தை உருவாக்குகிறார். அஷ்டமத்தில் சனியும், செவ்வாயும் அடியெடுத்து வைத்திருக்கிறார்கள். எனவே எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. பல பணிகள் பாதியிலேயே நிற்கும். வருமானப் பற்றாக்குறை உண்டு. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டு இதயத்தை வாட்டும். அதிக கவனம் தேவைப்படும் மாதம் இது.

செவ்வாய் - சனி சேர்க்கை

மாதத்தின் முதல் நாளிலேயே, கும்ப ராசிக்குச் செல்லும் செவ்வாய், இந்த மாதம் முழுவதும் கும்பத்தில் உள்ள சனியோடு சேர்ந்து சஞ்சரிக்கிறார். இந்த முரண்பாடான கிரகச் சேர்க்கை அவ்வளவு நல்லதல்ல. உங்களுக்கு யோகம் செய்யக்கூடிய கிரகமான செவ்வாய், அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் சனியோடு இணைவதால் குடும்பச் சுமை கூடும். கொடுக்கல் - வாங்கலில் போராட்டம் அதிகரிக்கும். நினைத்தது நிறைவேறாமல் போகலாம். நேசக்கரம் நீட்டியவர்கள் விலகிச் செல்வர்.

எந்த ஒரு புது முயற்சி செய்தாலும் அந்தக் காரியம் முடிவடையும் முன்பாக, மற்றவர்களிடம் சொல்வதை தவிர்ப்பது நல்லது. 'செலவு அதிகரிக்கின்றதே, வருமானம் போதவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். உத்தியோகத்தில் திடீரென பணிநீக்கம் செய்யப்படும் சூழ்நிலை உருவாகும். எனவே மேலதிகாரிகள் கொடுத்த வேலைகளை சரியாகச் செய்து முடிப்பது நல்லது. சொந்தத் தொழில் செய்பவர்கள், பங்குதாரர்களால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்ளுங்கள். குடும்ப ஒற்றுமை குறையாமல் இருக்க வழிபாடு அவசியம்.

புதன் வக்ரம்

பங்குனி 13-ந் தேதி, மீனத்தில் சஞ்சரிக்கும் புதன் வக்ரம் பெறுகின்றார். ஏற்கனவே அவர் மீனத்தில் நீச்சம் பெற்று சஞ்சரிப்பதால், இப்பொழுது வக்ரம் பெறுகையில் வலிமை இழந்து, சில நல்ல மாற்றங்களை உருவாக்குவார். வெளிநாடு செல்லும் முயற்சியில் அனுகூலம் ஏற்படும். கமிஷன் அடிப்படையில் அமைந்த தொழிலில் ஆதாயம் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கல் சீராகும். விலகிச்சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து இணைவர். வாகன மாற்றம் செய்ய முன்வரும் நேரம் இது. வழக்குகள் சாதகமாகும். தொழில் முன்னேற்றம் உண்டு.

மீனம் -சுக்ரன்

பங்குனி 19-ந் தேதி, சுக்ரன் தனது உச்ச வீடான மீன ராசிக்குச் செல்கிறார். அங்கு புதனோடு சேர்ந்து 'புத சுக்ர யோக'த்தையும், 'நீச்சபங்க ராஜயோக'த்தையும் உருவாக்குகிறார். எனவே நல்ல பலன்கள் இல்லம் தேடி வரப்போகிறது. சூரியனோடு இணைந்து 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுவதால், கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு எதிர்பாராத விதத்தில் வரலாம். உத்தியோகத்தில் உயர்பதவிகள் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படும். வீடு, இடம் வாங்குவது, கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள்.

பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாகவோ, கல்யாணம் சம்பந்தமாகவோ, கடல் தாண்டிச் சென்று பணிபுரிவது சம்பந்தமாகவோ ஏதேனும் முயற்சி செய்திருந்தால் அதில் வெற்றி கிடைக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மனக்கலக்கம் அதிகரிக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு ஏற்றமும், இறக்கமும் கலந்த நிலை உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமைக்குரிய அங்கீ காரம் கிடைக்காது. கலைஞர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும். மாணவ - மாணவிகளுக்கு மறதியால் மதிப்பெண்கள் குறையலாம். பெண்களுக்கு குடும்பச்சுமை கூடும். பொருளாதாரத்தில் பற்றாக்குறை ஏற்படும். விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டிய நேரம் இது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:

மார்ச்: 15, 16, 22, 23, 27, 28, ஏப்ரல்: 8, 9, 12, 13.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.

Similar News