கடகம் - தமிழ் மாத ஜோதிடம்

2024 தை மாத ராசிபலன்

Published On 2025-01-15 16:26 IST   |   Update On 2025-01-15 16:27:00 IST

கடகம்

பொதுநலத்தில் ஈடுபட்டு புகழ் குவிக்கும் கடக ராசி நேயர்களே!

தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிக்கு யோகம் தரும் கிரகமான செவ்வாய் உங்கள் ராசியிலேயே நீச்சம் பெற்றும், வக்ரம் பெற்றும் சஞ்சரிக்கிறார். எனவே எதையும் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்துச் செய்ய வேண்டிய நேரம் இது. விரயங்கள் அதிகமாகவும், வருமானம் குறைவாகவும் இருக்கும். அடுத்தவர்களை நம்பி எந்த புது முயற்சியிலும் ஈடுபட வேண்டாம். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாத சூழ்நிலை உருவாகும். எனவே வாக்கு கொடுக்கும் முன்பு சிந்தித்துக் கொடுக்க வேண்டும்.

மிதுன - செவ்வாய்

தை 5-ந் தேதி மிதுன ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு வக்ரம் பெற்று இருக்கிறார். உங்கள் ராசிக்கு 5,10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் வக்ரம் பெறுவது நல்லதல்ல. கடன் சுமை சங்கிலித் தொடர்போல நீளும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஆதரவு குறையும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த சம்பளப் பாக்கிகள் மேலும் தாமதமாகும். தொழில் செய்பவர்கள், பணியாளர்களாலோ, பங்குதாரர்களாலோ ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடும். இக்காலத்தில் செவ்வாய்க்குரிய சிறப்பு தலங்களுக்குச் சென்று வழிபட்டு வருவது நல்லது.

மகர - புதன்

உங்கள் ராசிக்கு 3,12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், தை 6-ந் தேதி மகர ராசிக்குச் செல்கிறார். அவர் சப்தம ஸ்தானத்திற்கு வரும்பொழுது உடன்பிறப்புகளின் திருமண விழாக்கள் சிறப்பாக நடைபெறும். சொத்துப் பிரச்சினை சுமுகமாக முடியும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்குரிய அங்கீகாரம் கிடைக்கும். பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் நட்பு உதவும். பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டு, புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு. வெளிநாட்டில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக்கொள்வது பற்றி சிந்திப்பீர்கள்.

கும்ப - புதன்

தை 23-ந் தேதி கும்ப ராசிக்கு புதன் செல்கிறார். 12-க்கு அதிபதியான அவர், 8-ம் இடத்தில் சஞ்சரிப்பது அற்புதமான நேரம்தான். இயல்பான வாழ்க்கையில் எதிர்பாராத நல்ல சம்பவங்கள் நடைபெறும். 'மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் உண்டு' என்பதற்கேற்ப, பல நாட்களாக முடிவடையாமல் இருந்த பஞ்சாயத்து இப்பொழுது முடிவிற்கு வரும். கிடைக்கும் சந்தர்ப்பங்களை உபயோகப்படுத்திக்கொள்ளுங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துக்களுக்கு செவிசாய்ப்பர். உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.

குரு வக்ர நிவர்த்தி

உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், குரு பகவான். ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் அவர், தை 29-ந் தேதி வக்ர நிவர்த்தி ஆகிறார். 9-க்கு அதிபதி 11-ம் இடத்தில் பலம் பெறுவதால் வருமானம் உயரும். வளர்ச்சி கூடும். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடி செய்துமுடிப்பீர்கள். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். உத்தியோகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பு உண்டு. தொழிலில் பழைய பங்குதாரர்கள் விலகினாலும், புதியவர்கள் வந்திணையும் வாய்ப்பு உண்டு. வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீர்கள்.வெளிநாட்டில் இருந்து ஆதாயம் தரும் தகவல் வரலாம். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு, அபரிமிதமான லாபம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். கலைஞர்களுக்கு புகழ்கூடும். மாணவ - மாணவிகளுக்கு மறதி ஏற்படலாம். கவனம் தேவை. பெண்களுக்கு சுபச்செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் அன்பும், பாசமும் பெருகும். எதிர்பாராத வரவு உண்டு.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

ஜனவரி: 17, 18, 22, 24, பிப்ரவரி: 2, 3, 6, 7.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

Similar News