கடகம் - தமிழ் மாத ஜோதிடம்

தை மாத ராசிபலன்

Published On 2024-01-11 09:54 IST   |   Update On 2024-01-11 09:59:00 IST

எல்லோரிடமும் எளிதில் பழகும் ஆற்றலைப் பெற்ற கடக ராசி நேயர்களே!

தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் சனி அஷ்டமத்தில் சஞ்சரிக்கின்றார். எனவே அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் தொடங்கியிருப்பதால் எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. சொந்த வீட்டில் சனி சஞ்சரிப்பதால் வரும் விரயங்கள் சுபவிரயங்களாக மாறும். குடும்பப் பெரியவர்களையும், அனுபவஸ்தர்களையும் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பதன் மூலம் செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். இட மாற்றங்கள், வீடு மாற்றங்கள் எதிர்பார்த்தபடி அமையும் நேரமிது.

மேஷ-குருவின் சஞ்சாரம்!

மாதத் தொடக்கத்தில் மேஷ ராசியில் குரு பகவான் சஞ்சரிக்கின்றார். வக்ர நிவர்த்தியாகி பத்தாம் இடத்தில் சஞ்சரிக்கும் குருவால் பலவித மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக, 'பத்தில் குரு வந்தால் பதவியில் மாற்றம் உண்டு' என்பது பழமொழி. திசாபுத்தி பலம் பெற்றிருக்குமேயானால் நல்ல மாற்றங்கள் வரலாம். இல்லையேல் இதயத்திற்கு இனிமை தராத விதத்தில் மாற்றங்கள் வந்து சேரும்.

எனவே இதுபோன்ற நேரங்களில் வியாழக்கிழமை தோறும் விரதமிருந்து குரு பகவானை வழிபடுவது நல்லது. குரு உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். எனவே உத்தியோகத்தில் ஒரு சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். ஒரு சிலருக்கு வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் பணிபுரிய எடுத்த முயற்சி கைகூடும்.

தனுசு-சுக்ரன்!

ஜனவரி 19-ந் தேதி தனுசு ராசிக்கு சுக்ரன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 6-ம் இடத்திற்கு வரும் இந்த நேரம் வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் வழங்குவர். தொழிலில் ஏற்பட்ட தொய்வு அகலும். பதவியில் இருப்பவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பர். கடன்சுமை பாதிக்கு மேல் குறையும்.

மகர-புதன்!

ஜனவரி 27-ந் தேதி மகர ராசிக்கு புதன் வருகின்றார். எனவே, `புத ஆதித்ய யோகம்' உருவாகின்றது. உங்கள் ராசிக்கு 2-ம் இடத்திற்கு அதிபதியான சூரியனும், விரயாதிபதி புதனும் இணையும் இந்த நேரத்தில் மங்கல ஓசை மனையில் கேட்க வாய்ப்புகள் வரும். தங்கு தடைகள் தானாக விலகும். வீடு கட்டிக் குடியேறும் யோகமும் உண்டு. அரசுவழி வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு அது கைகூடும். தொழில், முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மகிழ்ச்சியைத் தரும்.

மகர-செவ்வாய் சஞ்சாரம்!

பிப்ரவரி 4-ந் தேதி மகர ராசிக்கு செவ்வாய் செல்கின்றார். அது செவ்வாய்க்கு உச்ச வீடாகும். உங்கள் ராசிக்கு யோகம் செய்யும் கிரகம் செவ்வாய். அவர் உச்சம் பெறுவதால் எல்லா வழிகளிலும் உங்களுக்கு நன்மை கிடைக்கப் போகின்றது. பொருளாதார நிலை உச்சம் பெறும். புதிய வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு அது கைகூடும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பாதை புலப்படும்.

வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு மாற்றினத் தவர்களின் ஒத்துழைப்பால் மகிழ்ச்சி கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் பதவிகள் உண்டு. கலைஞர்களுக்கு வாய்ப்புகள் வாசல் தேடி வரும். மாணவ-மாணவியர்களுக்கு மறதி அதிகரிக்கலாம். பெண் களுக்கு குடும்பச்சுமை கூடும். வாழ்க்கைத் துணையுடன் விட்டுக்கொடுத்துச்செல்ல வேண்டிய நேரமிது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

ஜனவரி: 17, 18, 21, 22, 28, 29, பிப்ரவரி: 1, 2,

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.

Similar News