உதவும் குணத்தால் பிறர் உள்ளத்தைக் கவரும் கடக ராசி நேயர்களே!
ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்திலேயே உங்கள் ராசியில் தனாதிபதி சூரியன் சஞ்சரிக்கிறார். அவரோடு சுக்ரனும், புதனும் இணைந்திருக்கிறார்கள். 'புத ஆதித்ய யோக'மும், 'புத சுக்ர யோக'மும் செயல்படும் இந்த நேரத்தில் பொருளாதார பற்றாக்குறை அகலும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் வலுவிழந்து இருப்பதால் ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.
குரு - செவ்வாய் சேர்க்கை
மாதத் தொடக்கத்திலேயே குருவும் செவ்வாயும் இணைந்து லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்கள். 'குரு மங்கள யோகம்' செயல்படும் இந்த நேரத்தில் சுபச் செய்திகள் வந்த வண்ண மாகவே இருக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். கல்யாணக் கனவு நனவாகும். கடமையில் கண்ணும், கருத்துமாக செயல்படுவீர்கள். சகோதரர்களின் ஒத்துழைப்போடு சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு. கட்டிடங்கள் கட்டும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உயர்பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகும். இடமாற்றம் நன்மை தரும்.
புதன்- வக்ரம்
கடக ராசியில் சஞ்சரிக்கும் புதன், ஆடி 5-ந் தேதி வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் வக்ரம் பெறும் இந்த நேரத்தில் புதிய வழக்குகள் வரலாம். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு குறையும். பயணங்கள் அதிகரிக்கும். ஆனால் அவற்றால் ஆதாயம் இருக்காது, அலைச்சல் மட்டுமே மிச்சமாகும். உடல்நலனில் கவனமாக செயல்படுங்கள். உத்தியோகத்தில் விருப்பமில்லாத இடமாற்றம் கிடைத்து மன வருத்தத்தை உண்டாக்கும். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. பணம் வந்த மறுநிமிடமே செலவாகிவிடும்.
சிம்ம - சுக்ரன்
ஆடி 16-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் தன ஸ்தானத்திற்கு வரும் போது, வருமானப் பற்றாக்குறை அகலும். வளர்ச்சி கூடும். திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். தெய்வீகச் சிந்தனை மேலோங்கும். ஒரு சிலருக்கு தலைமைப் பதவிகள் கிடைக்கலாம். உத்தியோகத்தில், உயர் அதிகாரிகள் உங்களுக்கு நெருக்கமாக மாறுவர். அதன் விளைவாக கேட்ட சலுகைகள் கிடைக்கப்பெறும். வீடு கட்டுவது, கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு, போட்டிகளுக்கு மத்தியில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனதிற்கு பிடித்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். கலைஞர்களுக்கு சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் பெண்களுக்கு வெற்றி கிடைக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்து சேருவர்.
பணத்தேவையை பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜூலை: 25, 26, 27, 31, ஆகஸ்டு: 1, 6, 7, 12, 13.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.