தனுசு - தமிழ் மாத ஜோதிடம்

2024 ஆவணி மாத ராசிபலன்

Published On 2024-08-20 03:08 GMT   |   Update On 2024-08-20 03:13 GMT

இல்லம் தேடி வருபவரை நன்றாக உபசரிக்கும் தனுசு ராசி நேயர்களே!

ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு, ருண - ரோக ஸ்தானத்தில் சஞ்சரிக் கிறார். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற குரு 6-ல் சஞ்சரிக்கும் பொழுது, திடீர் திடீரென நல்ல மாற்றம் வந்துசேரும்.

சுப விரயங்களும் அதிகரிக்கும். சனி வக்ர இயக்கத்தில் இருப்பதால் குடும்பத்தில் பழைய பிரச்சினை மீண்டும் தலைதூக்கலாம். மனக்குழப்பம் அதிகரிக்கும். இருப்பினும் தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்பட்டு, தடைகளை முறியடித்து வெற்றி காண்பீர்கள்.

சனி - சூரியன் பார்வை

கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், இம்மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். சிம்மத்தில் சஞ்சரிக்கும் சூரியன் அவரை பார்க்கிறார். இந்த பகைக் கிரகங்களின் பார்வை அவ்வளவு நல்லதல்ல. அரசியல், பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு இது ஒரு சோதனை காலமாகும். வீண் பழிகளும், வழக்குகளும் வீடு தேடி வரலாம். குடும்பத்திலும் உறவினர் பகை அதிகரிக்கும்.

பாகப்பிரிவினைக்காக எடுத்த முயற்சி பலன் தராமல் போகலாம். தேக நலனில் கவனம் தேவை. ஒவ்வாமை நோய்க்கு ஆட்பட நேரிடும். அலைச்சலை குறைத்து, ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவதன் மூலம் உடல் நலத்தை சீராக வைத்துக்கொள்ளலாம். சனிக்குரிய சிறப்பு ஸ்தலங்களுக்கும், சூரியனுக்குரிய சிறப்பு ஸ்தலங்களுக்கும் யோக பலம் பெற்ற நாளில் சென்று வழிபட்டு வந்தால் நல்லது நடக்கும்.

சுக்ரன் நீச்சம்

ஆவணி 10-ந் தேதி கன்னி ராசிக்குச் செல்லும் சுக்ரன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிநாதன் குருவிற்கு சுக்ரன் பகை கிரகமாவார். எனவே அவர் நீச்சம் பெறுவது ஒரு வழிக்கு நன்மைதான். உத்தியோகத்தில் திடீர் மாற்றமும், பதவி உயர்வும் கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக நடந்துகொள்வர். வீடு, வாகனம் வாங்க கடனுதவி கேட்டு விண்ணப்பித்திருந்தால் அது கிடைக்கக் கூடும்.

புதிய வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு அது கைகூடும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. பழைய நகைகளைக் கொடுத்து விட்டு புதிய நகைகளை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். என்றைக்கோ குறைந்த விலைக்கு வாங்கிப்போட்ட இடம், இப்பொழுது அதிக விலைக்கு விற்று மகிழ்ச்சியை கொடுக்கும்.

மிதுன - செவ்வாய்

ஆவணி 10-ந் தேதி, மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் சப்தம ஸ்தானத்திற்கு வருவது, யோகமான நேரம் தான். படித்து முடித்த பிள்ளை கள் இருந்தால் அவர்களுக்கு வேலையும் கிடைக்கும், திருமண முயற்சியும் கைகூடும். தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்பட்டு சாதனை நிகழ்த்தும் நேரம் இது.

உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை சிறப்பாக முடித்துக் கொடுத்து பாராட்டுகளை பெறுவீர்கள். இக்காலத்தில் பயணங்கள் அதிகரிக்கும். தொழில் நிமித்தமாக காலை ஒரு ஊரிலும், மதியம் ஒரு ஊரிலும், மாலை ஒரு ஊரிலும் பயணிக்கும் சூழ்நிலை ஏற்படலாம். அதிகார வர்க்கத்தினரின் நட்பால் நன்மை அடைவீர்கள்.

சிம்ம - புதன்

ஆவணி 15-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் பாக்கிய ஸ்தானத்திற்கு வரும்போது, 9-க்கு அதிபதி சூரியனோடு இணைவதால் 'தர்ம கர்மாதிபதி யோகம்' ஏற்படுகிறது. எனவே பொது வாழ்வில் புகழ்கூடும்.

புதிய பொறுப்புகள் வந்து சேரும். எதிர்பார்த்த இலக்கை அடைய நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். தந்தை வழி ஆதரவு உண்டு. பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் படிப்படியாக நிறைவேறும். வரன்கள் வாசல் தேடிவரும் நேரம் இது.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மக்கள் செல்வாக்கு மேலோங்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு அதை விரிவு செய்யும் முயற்சியில் ஆர்வம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர் களுக்கு மேலிடத்து ஆதரவு திருப்தி தரும். கலைஞர் களுக்கு சாதகமான நேரம் இது. மாணவ - மாணவிகளுக்கு பெற்றோரின் ஆதரவு உண்டு. பெண்களுக்கு குடும்பச் சுமை கூடும். கொடுக்கல் - வாங்கல்கள் ஒழுங்காகும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

ஆகஸ்டு: 19, 20, 22, 23, செப்டம்பர்: 2, 3, 7, 8, 15, 16.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

Similar News