நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைக்கும் தனுசு ராசி நேயர்களே!
புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும்பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு 6-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். ராசிக்கு 7-ம் இடத்தில் செவ்வாய் இருக்கிறார். செவ்வாய் 'தைரியகாரன்' என்பதால், தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
நினைத்ததை நினைத்த நேரத்தில் சாதித்துக் காட்டு வீர்கள். இருப்பினும் ருண ரோக ஸ்தானத்தில் குரு இருப்பதால் மனக்குழப்பமும் நிழல்போல தொடரும். பொருளாதாரத்தை பொறுத்தவரை ஏற்ற இறக்க நிலை உண்டு. தடைகளை முறியடிக்க தன்னம்பிக்கையோடு, தெய்வ நம்பிக்கையும் தேவை.
சனி வக்ரம்
கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 2, 3 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. அவர் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. குடும்பத்தில் பிள்ளை களாலும், மற்றவர்களாலும் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். நல்லமுறையில் இதுவரை நடந்துகொண்ட சகோதரர்கள், இப்பொழுது பகையாக மாறலாம்.
கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது. குடும்பத்தில் பழைய பிரச்சினை தலைதூக்கும். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்கள், வீண்பழிக்கு ஆளாக நேரிடும். பஞ்சாயத்துக்கள் சாதகமாக அமையாது. புதிய வழக்குகள் கூட தோன்றலாம். இக்காலத்தில் முறையாக விரதம் இருந்து சனி பகவானை வழிபடுவது நல்லது.
புதன் உச்சம்
புரட்டாசி 3-ந் தேதி, கன்னி ராசியில் புதன் உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். தொழில் ஸ்தானாதிபதியான அவர் தொழில் ஸ்தானத்திலேயே உச்சம் பெறுவது யோகம்தான். தொழில்வளம் சிறப்பாக இருக்கும். தொழிலை விரிவு செய்ய வங்கிகளின் ஒத்துழைப்பும், வள்ளல்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
தங்கு தடைகள் தானாக விலகி தனவரவு பெருகும். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்துசேரும். உத்தியோகத்தை பொறுத்தவரை உயர் அதிகாரிகளால் நன்மை கிடைக்கும். பதவி உயர்வும், ஊதிய உயர்வும் தேடிவரும். ஒரு சிலருக்கு பணி நிரந்தரம் பற்றிய நல்ல தகவல் கிடைக்கும்.
துலாம் - சுக்ரன்
புரட்டாசி 3-ந் தேதி, துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அது சுக்ரனுக்கு சொந்த வீடாகும். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் லாப ஸ்தானத்தில் வரும்பொழுது, பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். புனித பயணம் அதிகரிக்கும். வியாபாரத்தில் சிறிய முதலீடு செய்து பெரிய லாபம் காண்பீர்கள்.
திருமண யோகம் கைகூடிவரும். சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாக முடியும். வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து பணிபுரிய அழைப்புகள் வரலாம். புகழ்மிக்க ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரவேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும்.
துலாம் - புதன்
புரட்டாசி 20-ந் தேதி, துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். அவர் அங்குள்ள சுக்ரனோடு இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குகிறார். இதன் விளைவாக தொழில் முன்னேற்றம், உத்தியோக முன்னேற்றம் ஏற்படும். இடம், பூமி விற்பனையால் எதிர்பாராத தன லாபம் வரலாம். வாழ்க்கை துணைக்கு வேலை கிடைத்து உதிரி வருமானம் வந்துசேரும்.
குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் முயற்சி கை கூடும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.
உத்தியோகத்தில் உள்ளவர்கள், 'விருப்ப ஓய்வு பெற்றுக்கொள்ளலாமா?' என்று சிந்திப்பார்கள். கலைஞர்களுக்கு நட்பால் நன்மை உண்டு. மாணவ - மாணவிகளுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பெண்களுக்கு குடும்பச் சுமை கூடும். பிள்ளைகளின் எதிர்கால கனவுகளை நனவாக்குவீர்கள்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
செப்டம்பர்: 19, 20, 30, அக்டோபர்: 1, 2, 5, 12, 13, 16, 17.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.