தனுசு - தமிழ் மாத ஜோதிடம்

பங்குனி மாத ராசிபலன்

Published On 2024-03-13 05:02 GMT   |   Update On 2024-03-13 05:06 GMT

சிந்தனையை செயலாக்குவதில் வல்லவர்களான தனுசு ராசி நேயர்களே!

பங்குனி மாதக் கிரக நிலைகளைஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு, பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து கொண்டு, உங்கள் ராசியைப் பார்க்கிறார். எனவே 'குரு பார்க்க கோடி நன்மை' என்பதற்கேற்ப தொழில் வெற்றிநடை போடும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். அழியாத புகழுக்கு அஸ்திவாரம் அமைக்கும் விதத்தில், ஒருசில காரியங்கள் நடைபெறும். தொழில் மேன்மை, வருமானம் உயர்வு, உத்தியோகத்தில் உயர் அதிகாரி களின் பாராட்டு கிடைக்கும் மாதம் இது.

செவ்வாய் - சனி சேர்க்கை

மாதத்தின் முதல் நாளிலேயே கும்ப ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்குள்ள சனியோடு மாதம் முழுவதும் இணைந்து சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். விரயாதிபதியான செவ்வாய், தனாதிபதியான சனியோடு இணையும் இந்த நேரத்தில் விரயங்கள் அதிகரிக்கும். மற்றவர்களை முழுமையாக நம்பி செயல்படுவதால், இழப்புகளையும், விரயங்களையும் சந்திப்பீர்கள். வீடு மாற்றம், இடமாற்றம் ஏற்பட்டு மனக்குழப்பதை அதிகரிக்க வைக்கும். சகோதர வழியில் மனக்கசப்பு தரும் சம்பவம் நடைபெறும்.

செய்யும் காரியங்களில் எல்லாம், தட்டுப்பாடுகளும், தடுமாற்றங்களும் ஏற்படாமல் இருக்க சனிக்கிழமை தோறும் சனிபகவான் வழிபாட்டையும், செவ்வாய்க்கிழமை தோறும் அங்காரக வழிபாட்டையும் மேற்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட தூரத்திற்கான மாறுதல்கள் கிடைக்கலாம்.

புதன் வக்ரம்

மீன ராசியில் நீச்சம் பெற்று சஞ்சரித்து வரும் புதன், பங்குனி 13-ந் தேதி வக்ரமும் அடைகிறார். இதன் விளைவாக சில நல்ல பலன்கள் உங்களுக்கு நடைபெறப் போகிறது. கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம், வக்ரம் பெறுவது நன்மைதான். இல்லத்தில் மங்கல ஓசை கேட்கும் சூழ்நிலை உருவாகும். மணவிழா, மணிவிழா, முத்து விழா போன்றவை நடைபெறுவதில் இருந்த தடைகள் அகலும். பயணங்கள் கூட பலன் தருவதாக இருக்கும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் அதிகரிக்கும். வெளிநாட்டில் உள்ள நண்பர்கள் மூலம் ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைத்து பொருளாதார நிலை உயர வழிபிறக்கும்.

மீனம் - சுக்ரன்

பங்குனி 19-ந் தேதி, சுக்ரன் தன்னுடைய உச்ச வீடான மீன ராசிக்குச் செல்கிறார். அங்கு புதனோடு இணைந்து 'புத-சுக்ர யோக'த்தை உருவாக்குகிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். எனவே உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் வி.ஐ.பிக்கள் வாடிக்கையாளர்களாக மாறுவர். வாங்கிய கடனில் ஒரு பகுதியைக் கொடுத்து மகிழ்ச்சி அடைவீர்கள். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். குடும்பத்தில் ஒருவருக்கு மேல் சம்பாதிக்கும் சூழ்நிலையும் பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். மன தைரியம் அதிகரிக்கும். புதிய பாதை புலப்படும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட தூரத்திற்கான இடமாறுதல் வரலாம். கலைஞர்களுக்கு நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். மாணவ - மாணவிகளுக்கு மந்த நிலை மாறும். கல்வி சிந்தனை அதிகரிக்கும். பெண்களுக்கு எடுத்த காரியங்களில் வெற்றி உண்டு. எதிர்பாராத பணவரவும் கிடைக்கும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

மார்ச்: 14, 22, 24, 27, 28, ஏப்ரல்: 4, 5, 8, 9.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

Similar News