தனுசு - தமிழ் மாத ஜோதிடம்

வைகாசி மாத ராசிபலன்

Published On 2024-05-15 04:44 GMT   |   Update On 2024-05-15 04:45 GMT

வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு பகவான் 6-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். 'ஆறில் குரு ஊரில் பகை' என்பது ஜோதிட மொழி. பகைக்கு மத்தியில் உங்கள் வாழ்க்கை அமைந்தாலும் கடைசி நேரத்தில் காரியங்கள் கை கூடிவிடும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய திருப்பங்கள் ஏற்படும். மதிப்பும் மரியாதையும் உயரும். குருவின் பார்வை பலத்தால் பொருளாதாரம் சிறப்பாகவே இருக்கும். குடும்ப ஒற்றுமை பலப்படும்.

ரிஷப - சுக்ரன்

வைகாசி 7-ந் தேதி, ரிஷப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் எதிரிகள் ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரத்தில் எதிரிகளின் பலம் மேலோங்கி இருக்கும். இருப்பினும் உங்கள் ராசிநாதன் குருவோடு சுக்ரன் இணைந்திருப்பதால் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். கடன் சுமை குறைய வழிபிறக்கும். உடல் ஆரோக்கியம் சீராக, ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது. தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். 'கட்டிய வீடு பாதியில் நிற்கிறதே' என்ற கவலை இனி அகலும். பூமி பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும்.

ரிஷப - புதன்

வைகாசி 11-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் மறைவிடத்திற்கு வரும்பொழுது யோகம் செய்யும். எனவே தொழில், உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். 'தொலைதூரத்தில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக்கொள்ளலாமா?' என்று சிந்திப்பீர்கள். இடமாற்றம், வீடு மாற்றம் மட்டுமின்றி, தொழில் மற்றும் உத்தியோகத்திலும் மாற்றம் வருவதற்கான அறிகுறிகள் தென்படும். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். பணியாளர்கள் தொல்லை அகலும். விலகிச்சென்ற திருமண வாய்ப்புகள் மீண்டும் கைகூடி வரலாம்.

மேஷ - செவ்வாய்

வைகாசி 18-ந் தேதி, மேஷ ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5-ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு செவ்வாய் வருவது யோகம்தான். பூர்வ புண்ணியத்தின் பலனாக உங்களுக்கு என்னவெல்லாம் கிடைக்க வேண்டுமோ, அவை அனைத்தும் இப்பொழுது கிடைக்கும். பூர்வீகச் சொத்து தகராறுகள் அகலும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். வீடு வாங்குவது அல்லது கட்டிய வீட்டை பழுது பார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள்.

மிதுன - புதன்

வைகாசி 27-ந் தேதி, மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். சப்தமாதிபதியான புதன், சப்தம ஸ்தானத்திலேயே சஞ்சரிக்கும் பொழுது பயணங்கள் அதிகரிக்கும். வெளிநாடு சென்று பணிபுரிய விரும்பியவர்களுக்கு அது கைகூடும். 'நல்ல படிப்பு இருந்தும் வாழ்க்கைத் துணைக்கு வேலை இல்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு வேலை கிடைக்கும். உதிரி வருமானமும் வந்துசேரும். பணிபுரியும் இடத்தில் உங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். அதற்கேற்ப சம்பளமும் கூடும். மேலதிகாரிகளின் மனதில் இடம் பிடிப்பீர்கள். பழைய வாகனங்களை கொடுத்து விட்டு, புதிய வாகனங்கள் வாங்கி பயணிக்கும் எண்ணம் நிறைவேறும்.

மிதுன - சுக்ரன்

வைகாசி 31-ந் தேதி, மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 7-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது, கடன் சுமை கூடுவதால், கவலைகளும் அதிகரிக்கும். குடும்ப ஒற்றுமை குறையாமல் பார்த்துக்கொள்வது நல்லது. மாமன், மைத்துனர் வழியில் மனக்கசப்பு தரும் தகவல் வரலாம். புதிய ஒப்பந்தங்கள் கை நழுவிச் செல்லும். புனித பயணங்களை மேற்கொள்வீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர் களுக்கு, சகப் பணியாளர்களின் ஆதரவு குறையும். கலைஞர்களுக்கு கவுரவம், அந்தஸ்து உயரும். மாணவ- மாணவிகளுக்கு தேர்வில் வெற்றி உண்டு. பெண் களுக்கு கையிருப்பு கரைந்தாலும் மீண்டும் பணம் வரும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- மே: 16, 17, 21, 22, 29, 30, ஜூன்: 1, 2, 14.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- இளஞ்சிவப்பு.

Similar News