உதவும் குணத்தால் உள்ளத்தில் இடம் பிடிக்கும் தனுசு ராசி நேயர்களே!
மார்கழி மாதக் கிரக நிலைகளைஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு வக்ர நிவர்த்தியாகி உங்கள் ராசியையே பார்க்கிறார். எனவே ஆரோக்கியம் சீராகும். அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டு.
புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அரசியல் மற்றும் பொது நலத்தில் இருப்பவர்களுக்கு அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கலாம். செல்வாக்கு அதிகரிக்கும்.
கும்ப ராசியில் சனி
மகர ராசியில் சஞ்சரித்து வந்த சனி பகவான் மார்கழி 4-ந் தேதி கும்ப ராசிக்கு செல்கின்றார். வாக்கிய கணித ரீதியாக நடைபெறும் இந்த சனிப்பெயர்ச்சி மூலம் உங்களுக்கு 7½ சனியில் இருந்து விடுதலை கிடைக்கிறது. எனவே இனி படிப்படியாக முன்னேற்றங்கள் வந்து கொண்டே இருக்கும். பாராட்டும், புகழும் கூடும். மலைப்பாக இருந்த காரியங்களைக் கூட மறுநிமிடமே செய்து முடித்து விடுவீர்கள்.
தொழில் வளம் சிறப்பாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பு கிட்டும். கடந்த 7½ ஆண்டுகளாக பட்ட துன்பங்களுக்கு இப்பொழுது விடிவு காலம் கிடைக்கும். சனிக்குரிய சிறப்பு தலங்களுக்கு யோக பலம் பெற்ற நாளில் சென்று வந்தால் மேலும் யோகங்கள் வந்து சேரும்.
விருச்சிக-சுக்ரன்
மார்கழி 9-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் ெசல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 11-க்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது எதிர்பாராத நல்ல திருப்பங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் கேட்ட இடத்திற்கு மாறுதல்கள் கிடைக்கும்.
வெளிநாட்டிலுள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். கட்டிடம் கட்டி குடியேறும் யோகம் சிலருக்கு உண்டு. விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த நற்பலன்கள் கிடைக்கும்.
தனுசு-செவ்வாய்
தனுசு ராசிக்கு மார்கழி 11-ந் தேதி செவ்வாய் பெயர்ச்சியாகி செல்கின்றார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் உங்கள் ராசிக்கே வருவது யோகம் தான். பிள்ளைகள் வழியில் சுபகாரிய பேச்சுக்கள் முடிவாகும் மங்கல ஒசை மனையில் கேட்கவில்லையே என்ற கவலை அகலும். தங்கு தடைகள் தானாக விலகும்.
பங்குச் சந்தையில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு பலன் கிடைக்கும். பால்ய நண்பர்களின் ஒத்துழைப்பால் சில முக்கிய பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சகப் பணியாளர்களின் ஆதரவும் உண்டு.
தனுசு-புதன்
மார்கழி 23-ந் தேதி தனுசு ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கப் போவது யோகம் தான். வாழ்க்கைத்துணைக்கு வேலை கிடைக்கும். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல மாற்றங்கள் வந்து சேரும். வியாபாரம், தொழில் செய்பவர்கள் வளர்ச்சி காண்பார்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கலைஞர்களுக்கு கவுரவம், அந்தஸ்த்து உயரும்.
மாணவ- மாணவிகளுக்கு தக்கவிதத்தில் ஆசிரியர்களின் ஆலோசனை கைகொடுக்கும். பெண்களுக்கு குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் அகலும், சுப செலவுகள் உண்டு.
பணத்தேவையை பூர்த்திசெய்யும் நாட்கள்:-
டிசம்பர்: 17,18,20,21,31
ஜனவரி: 1,2,6,7.
மகிழ்ச்சிதரும் வண்ணம்:- பொன்னிற மஞ்சள்.