நிசான் மேக்னைட் வாங்க போறீங்களா? இதை தெரிஞ்சுகோங்க
- காம்பேக்ட் எஸ்.யு.வி. பிரிவில் கவனம் செலுத்த நிசான் முடிவு.
- மேக்னைட் மாடலை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டம்.
நிசான் இந்தியா நிறுவனம் 2025 ஆண்டு மிட்சைஸ் எஸ்.யு.வி. பிரிவில் களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு முன் நிசான் நிறுவனம் தனது மேக்னைட் மாடலை முடிந்த அளவுக்கு மேம்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவில் நிசான் நிறுவனத்தின் சி செக்மண்ட் எஸ்.யு.வி. அறிமுகமாகும் வரை காம்பேக்ட் எஸ்.யு.வி. பிரிவில் கவனம் செலுத்த நிசான் முடிவு செய்துள்ளது.
அந்த வகையில், நிசான் நிறுவனம் மேக்னைட் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை உருவாக்கி வருவதாக தெரிகிறது. இந்த கார் அடுத்த ஆண்டு மத்தியில் அறிமுகம் செய்யப்படலாம். இந்தியாவில் இருந்து வெளிநாட்டு வியாபாரத்தை கட்டமைக்கும் நோக்கில் நிசான் நிறுவனம் மேக்னைட் மாடலை மெக்சிகோ, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இருக்கிறது.
தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த நிசான் மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மூத்த அலுவலர் ஃபிரான்கோ பெய்லி, "மேக்னைட் எஸ்.யு.வி. மாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. உலகம் முழுக்க பல்வேறு சந்தைகளில் இந்த மாடலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உள்நாடு மட்டுமின்றி தென் ஆப்பிரிக்காவிலும் மேக்னைட் மாடல் அமோக வெற்றி பெற்று இருக்கிறது," என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்த மாடலுக்கு வரவேற்பு இருக்கும் வரை அதனை மேலும் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் வளர்ச்சியடைவோம். தற்போதைக்கு இந்த காரின் வலதுபுற ஸ்டீரிங் கொண்ட வெர்ஷன் மட்டுமே உள்ளது. ஆனால் இடதுகை ஸ்டீரிங் கொண்ட மாடல் ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, லத்தீன் அமெரிக்கா, மெக்சிகோ போன்ற சந்தைகளில் இந்த காரை கொண்டுசெல்ல உதவும். இந்த கார் அந்த சந்தைகளுக்கு ஏற்ற மாடலாகவும் இருக்கும்," என்று தெரிவித்து உள்ளார்.