கருத்து சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக எதுவேண்டுமானாலும் சொல்ல முடியாது - ஆரவ் பேட்டி
- ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
- இப்படத்திற்கு சிலர் ஆதரவு தெரிவித்தாலும் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் நடித்த படம், 'தி கேரளா ஸ்டோரி'. கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் இந்து இளம் பெண்களை மூளைச் சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது.
இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி திரையுலகில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியது. இப்படம் குறித்து வாதம் விவாதங்கள் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் நடந்து வந்தன. பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் கருத்தை தெரியப்படுத்தி வந்தனர் இந்தியாவில் சில மாநிலங்களில் படத்தைத் திரையிடவில்லை. தமிழ்நாட்டிலும் முதல் நாள் வெளியிட்டு மறுநாள் தியேட்டகளில் படம் ஓடவில்லை.
தி கேரளா ஸ்டோரி
இவ்வாறு இப்படத்திற்கு பல எதிர்ப்புகள் கிளம்பியிருந்தது. இந்நிலையில், 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் குறித்த கேள்விக்கு குறிப்பிட மதத்தையோ, நபரையோ குறித்து கருத்து சொல்லக் கூடாது என நடிகர் ஆரவ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "நமக்கு கருத்து சுதந்திரம் என்பது இருக்கிறது. அதன் மூலம் நாம் எதை வெளிப்படுத்துகிறோம் என்பதும் இருக்கிறது. கருத்து சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக எதுவேண்டுமானாலும் சொல்ல முடியாது. ஒரு சமூகத்தையோ ஒரு மதத்தையோ, தனி நபரையோ தாக்கும் விதமான கருத்துகளை சொல்ல தேவையில்லை.
அதுபோன்று அனைத்தையும் சர்ச்சையாக்கினோம் என்றால் நாம் எந்த விதமான கருத்துகளையும் சொல்ல முடியாது. சினிமாவில் இருப்பவர்களுக்கு எந்த கருத்தை எடுக்க வேண்டும் என்ற பொறுப்பு இருக்கிறது. அனைத்தையும் சர்ச்சையாக்கினோம் என்றால் நாம் எதையும் பார்க்க முடியாது" என்று கூறினார்.
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கான தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.