சிவாஜிக்கு எந்த அரசும் மரியாதை செய்யவில்லை - இளையராஜா வேதனை
- முனைவர் மருது மோகன் எழுதிய சிவாஜி கணேசன் பற்றிய நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
- இந்நிகழ்ச்சியில் இளையராஜா, பாரதிராஜா, பாக்யராஜ், கவிஞர் முத்துலிங்கம், ராம்குமார், பிரபு, முனைவர் மருது மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முனைவர் மருது மோகன் எழுதிய சிவாஜி கணேசன் பற்றிய நூல் வெளியீட்டு விழா சென்னையில், நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இளையராஜா, பாரதிராஜா, பாக்யராஜ், கவிஞர் முத்துலிங்கம், ராம்குமார், பிரபு, முனைவர் மருது மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் கலந்து கொண்ட இளையராஜா பேசியதாவது, சிவாஜி அவர்களிடம் நான் கற்றுக்கொண்ட விஷயங்களில் ஒன்று நேரம் தவறாமை. இன்றுவரைக்கும் என்னுடைய ஸ்டுடியோவில் என் கார் சரியாக ஏழு மணிக்கு நுழைந்து விடும். ஒரு நாள் நான் தாமதமாக வந்து விட்டேன். என்ன ராசா நீயுமா லேட்டு என்று கேட்டார். இல்லண்ணே நான் சரியாகத்தான் வந்தேன். நீங்க முன்கூட்டியே வந்து விட்டீங்க என்றேன்.
உண்மையில் நான் தாமதமாக வரவில்லை. நான் சரியான நேரத்திற்குத் தான் வந்திருந்தேன். அவர் தான் சீக்கிரம் வந்துவிட்டார். ரிக்கார்டிங்கில் உள்ளே வந்து அவருடைய அனுபவங்களை எல்லாம் சொல்லிக் கொண்டிருப்பார். அதையெல்லாம் கேட்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
ஒருமுறை திரையுலகம் சார்பில் சிவாஜிக்குப் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதில் சிவாஜிக்கு ஒரு பரிசு கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதற்காக வசூல் செய்யப்பட்டது. இன்று இருக்கும் நடிகர்கள் சாப்பிடும் சாப்பாட்டில் ஒவ்வொரு அரிசியிலும் சிவாஜியின் பெயர் இருக்கிறது. அவருக்குக் கொடுக்கப்படும் பரிசில் யார் பெயரும் இருக்கக்கூடாது அதற்கு ஆகும் முழு பணத்தையும் நான் கொடுத்துவிடுகிறேன்.
அதனைத் தெரிந்து கொண்ட சிவாஜி, யாரை மறந்தாலும் இளையராஜாவை மறக்கக் கூடாது என என்னிடம் தெரிவித்தார். அவருக்கான மரியாதையை இந்த சினிமாவோ, அரசோ செய்யவில்லை. ஆனால் தனிப்பட்ட ஒருவன் செய்து விட்டான் என்றால் அது இளையராஜா ஒருவன் தான். இவ்வாறு அவர் பேசினார்.