சினிமா செய்திகள்

ரஜினிகாந்த்-பவன் கல்யாண் இணைந்து வந்தாலும் ஜெகன்மோகன் ரெட்டியை அசைக்க முடியாது - நடிகை ரோஜா

Published On 2023-05-01 09:05 GMT   |   Update On 2023-05-01 09:09 GMT
  • புதுவை வில்லியனூர் திருக்காஞ்சி கெங்கவராக நதீஸ்வரர் கோவிலையொட்டிய சங்கராபரணி ஆற்றில் புஷ்கரணி விழா கடந்த 22-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
  • இதில் ரோஜா பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.

புதுவை வில்லியனூர் திருக்காஞ்சி கெங்கவராக நதீஸ்வரர் கோவிலையொட்டிய சங்கராபரணி ஆற்றில் புஷ்கரணி விழா கடந்த 22-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 12 நாட்கள் நடைபெறும் புஷ்கரணி விழாவில் 9-ம் நாள் விழா இன்று நடந்தது.

புஷ்கரணியில் நேற்று மாலை நடந்த கங்கா ஆரத்தியில் நடிகையும், ஆந்திர மந்திரியுமான ரோஜா பங்கேற்று தரிசனம் செய்தார்.

அதன்பின்னர் பேசிய ரோஜா, பெரிய நடிகர்களில் பேசி பேசியே ஜீரோ ஆனவர் நடிகர் ரஜினிகாந்த். இதனை அவர் புரிந்து கொள்ள வேண்டும். என்.டி. ராமாராவ் மேலிருந்து ஆசிர்வாதம் செய்கிறார் என்று ரஜினிகாந்த் சொன்னது தவறு. ரஜினிகாந்த் ஏதோ தெரியாமல் தவறாக பேசுகிறார் என்று எண்ணினேன். ஆனால் அவர் தெரிந்தேதான் பேசி உள்ளார்.

ரஜினிகாந்த் பேசியதை பார்த்து ஆந்திரா, தெலுங்கானாவில் உள்ள என்.டி.ஆர். அபிமானிகள், மக்கள் அனைவரும் கோபத்தில் உள்ளனர். என்.டி.ஆரை கொலை செய்ய யார் திட்டம் போட்டாரோ அவரையே நல்லவர் என்று ரஜினிகாந்த் பேசுவது தவறு. அரசியலுக்கு வர வேண்டும் என்ற விருப்பம் இல்லாத ரஜினிகாந்த் அழைத்தார் என்பதற்காக சந்திரபாபு நாயுடு வீட்டில் சாப்பிட்டு அவர் கொடுத்த ஸ்கிரிப்ட்டை படித்துள்ளார்.

ஆந்திர அரசியலை பற்றி தெரியாத ரஜினிகாந்த் ஐடியாவே இல்லாமல் பேசி தற்போது ஜீரோவாகி உள்ளார். மற்ற மாநிலங்களுக்கு நடிகர்கள் போகும் போது அந்த மாநிலங்களை பற்றி தெரிந்து பேச வேண்டும். இல்லையென்றால் அமைதியாக இருக்க வேண்டும். ரஜினிகாந்த் தான் பேசியது குறித்து தெளிவாக ஒரு அறிக்கை வெளியிட வேண்டும்.

ஜெகன்மோகன் ரெட்டி மாதிரி ஒரு முதல்-மந்திரியை எங்குமே பார்க்க முடியாது. ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர மாநிலத்தின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2 லட்சம் மதிப்பிலான நிதி உதவிகளை செய்துள்ளார். மாணவர்கள் இடைநிற்றல் கூடாது என்பதற்காக கல்வி உதவி தொகைகளை அதிக அளவில் வழங்கி உள்ளார். இலவச கல்வியை ஆந்திர அரசே கொடுக்கிறது.

சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக பவன்கல்யாண், ரஜினிகாந்த் ஆகியோர் தனித்தனியாக வந்தாலும் ஒன்றாக சேர்ந்து வந்தாலும் ஜெகன்மோகன் ரெட்டியை அசைக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

ரோஜா ஆந்திராவில் ரஜினியை தாக்கி பேசி இருந்தார். இந்நிலையில் புதுவையில் மீண்டும் அவரை தாக்கி பேசியுள்ளது அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News