null
கேரள கோவிலுக்கு இயந்திர யானை வழங்கிய நடிகை பிரியாமணி
- மகாதேவர் கோவிலிலும் உயிருள்ள விலங்குகளை பயன்படுத்துவதில்லை என முடிவு எடுக்கப்பட்டது.
- இயந்திர யானையை வழங்கும் நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.
திருவனந்தபுரம்:
கேரள மாநில கோவில் விழாக்களில் யானைகளை பயன்படுத்துவது அந்த மாநிலத்தின் பாரம்பரியமாக உள்ளது. இதற்காக மாநிலத்தின் பெரும்பாலான கோவில் வளாகங்களிலேயே பிரத்யேகமாக யானைகள் வளா்க்கப்படுகிறது.
இதற்கு விலங்குகள் நல ஆா்வலா்கள் அதிருப்தி தெரிவித்தபடி இருந்தனர். அதனை கருத்தில் கொண்டு கோவில் விழாக்கள் உள்பட எந்த சடங்குகளிலும் இனி யானை உள்ளிட்ட உயிருள்ள விலங்குகளைப் பயன்படுத்துவதில்லை என மாநிலத்தில் முதல் முறையாக திருச்சூா் மாவட்டம் இரிஞ்சாடப் பள்ளி ஸ்ரீ கிருஷ்ணா் கோவில் நிா்வாகம் முடிவெடுத்தது.
அதன்படி அந்த கோவில் விழாக்களில் கடந்த ஆண்டு முதல் இயந்திர யானை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநிலத்தில் 2-ஆவது கோவிலாக கொச்சி திருக்கயில் மகாதேவர் கோவிலிலும் உயிருள்ள விலங்குகளை பயன்படுத்துவதில்லை என முடிவு எடுக்கப்பட்டது.
கோவில் நிா்வாகத்தின் அந்த முடிவை பாராட்டும் விதமாக, கோவிலுக்கு இயந்திர யானை ஒன்றை பீட்டா அமைப்பும், நடிகை பிரியாமணியும் இணைந்து பரிசளித்துள்ளனா். 'மகாதேவன்' எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த இயந்திர யானை, இனி கோவில் விழாக்களில் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயந்திர யானையை வழங்கும் நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் மகாதேவன் இயந்திர யானை, கோவில் நிா்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து நடிகை பிரியாமணி, 'தொழில்நுட்ப வளா்ச்சி மூலம் விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் நமது கலாசார நடைமுறைகள் மற்றும் பாரம்பரியம் பின்பற்றப்படுவதை நாம் உறுதிப்படுத்தலாம்' என்றாா்.
இது குறித்து மாகதேவர் கோவில் நிர்வாகத்தினர் கூறும்போது, 'மனிதா்கள் போல் தங்கள் குடும்பத்துடன் இணைந்து சுதந்திரமாக வாழவே எல்லா விலங்குகளையும் கடவுள் படைத்தாா். அந்த வகையில், கோவில் விழாக்களில் இயந்திர யானையை பயன்படுத்துவதில் மகிழ்ச்சிதான்' என்றனா்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.