டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்தை வீழ்த்தி அதிரடி காட்டிய ஆஸ்திரேலியா
- இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
- மிட்செல் மார்ஷ் 35 ரன்களையும், மேக்ஸ்வெல் 28 ரன்களையும் சேர்த்தனர்.
டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற 17-வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணிக்கு டிராவிஸ் ஹெட் மற்றும் டேவிட் வார்னர் சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர். இந்த ஜோடி முறையே 34 மற்றும் 39 ரன்களில் ஆட்டமிழந்ததுய அடுத்து வந்த கேப்டன் மிட்செல் மார்ஷ் 35 ரன்களையும், கிளென் மேக்ஸ்வெல் 28 ரன்களையும் சேர்த்தனர்.
இவர்களை தொடர்ந்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டாயினிஸ் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். போட்டி முடிவில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களை குவித்தது. இங்கிலாந்து சார்பில் கிரிஸ் ஜார்டன் 2 விக்கெட்டுகளையும், மொயின் அலி, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷித் மற்றும் லியம் லிவிங்ஸ்டன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
202 ரன்களை துரத்திய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் மற்றும் கேப்டன் ஜாஸ் பட்லர் ஜோடி சிறப்பான துவக்கம் கொடுத்தது. இருவரும் முறையே 37 மற்றும் 42 ரன்களை சேர்த்தனர். அடுத்து வந்த வில் ஜாக்ஸ் மற்றும் ஜானி பேர்ஸ்டோ தலா 10 மற்றும் 7 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தனர்.
மொயின் அலி மற்றும் ஹாரி புரூக் முறையே 25 மற்றும் 20 ரன்களை சேர்த்தனர். ஒருபக்கம் ரன்கள் சேர்த்த போதிலும், சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. இதன் காரணமாக இங்கிலாந்து அணி போட்டி முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.