உ.பி. வாரியர்சை வீழ்த்தி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது டெல்லி கேப்பிட்டல்ஸ்
- முதலில் ஆடிய உ.பி.வாரியர்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் சேர்த்தது.
- டெல்லி அணியின் துவக்க வீராங்கனைகள் கேப்டன் மெக் லேனிங்- ஷபாலி வர்மா அதிரடியாக ஆடி ரன் குவித்தனர்.
மும்பை:
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் உ.பி. வாரியர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய உ.பி. வாரியர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக ஆடிய தஹ்லியா மெக்ராத் 32 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 58 ரன்கள் (நாட் அவுட்) குவித்தார்.
டெல்லி அணி தரப்பில் அலைஸ் கேப்சி 3 விக்கெட்டுகளும், ராதா யாதவ் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இதையடுத்து 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது.
துவக்க வீராங்கனைகள் கேப்டன் மெக் லேனிங்- ஷபாலி வர்மா அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். ஷபாலி வர்மா 21 ரன்களும், மெக் லேனிங் 39 ரன்களும் விளாசினார். முன்னதாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். 4வது விக்கெட்டுக்கு இணைந்த மாரிசான் கேப்- அலைஸ் கேப்சி இருவரும் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த சூழ்நிலையில், அலைஸ் கேப்சி 34 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஜெஸ் ஜோனாசன் ரன் எதுவும் எடுக்காமல் வந்த வேகத்தில் நடையை கட்டினார். பின்னர் மாரிசான் அடுத்த இரண்டு பந்துகளில் வெற்றியை உறுதி செய்தார். அவர் 34 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
13 பந்துகள் மீதமிருந்த நிலையில், டெல்லி அணி 5 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் சேர்த்து இலக்கை எட்டியது. இதனால் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் டெல்லி அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.