ஆன்மிகம்
திருப்பூர் பெருமாநல்லூர் கொண்டத்துகாளியம்மன் கோவில் விழாவில் குண்டம் இறங்கிய பக்தர்களை படத்தில் காணலாம்.

கொண்டத்து காளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

Published On 2017-04-12 09:38 IST   |   Update On 2017-04-12 09:38:00 IST
பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு குண்டம் இறங்கினார்கள்.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் புகழ்பெற்ற பழமையான கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் குண்டம் இறங்கும் விழா மற்றும் தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் குண்டம் திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதை தொடர்ந்து காப்பு கட்டுதல், அஷ்டதிக் பாலர்கள் வழிபாடு, குதிரை வாகன காட்சிகள், அம்மன் புறப்பாடு, மஞ்சள் கிணறு நிரப்புதல், தோரணம் கட்டுதல் நடந்தது. பின்னர் நாதஸ்வர இன்னிசையுடன் யானையின் மீது அம்மன் புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா ஆகியவற்றுடன் வசந்தம் பொங்கல் விழா நடந்தது.

அதை தொடர்ந்து மஞ்சள் இடித்தல், பரிவட்டம் கட்டுதல், அன்று இரவு திருக்கல்யாண உற்சவம், வீரமக்களுக்கு காப்பு அணிவித்தல், அம்மன் மஞ்சள் நீராடுதல், வீரமக்கள் மஞ்சள் நீராடுதல் நடைபெற்றது.


கொண்டத்து காளியம்மன் கோவிலில் குண்டம் இறங்க காத்திருந்த பக்தர்களை படத்தில் காணலாம்.

நேற்றுமுன்தினம் இரவு 11 மணியளவில் குண்டம் திறப்பு, பூ வார்த்தல், சக்தி வேல்களுக்கு மஞ்சள் நீராட்டுதல், வீரமக்களுக்கு எண்ணெய் வழங்குதல், படைக்கல சாவடியில் பொங்கலிடுதல், படைக்கலம் எடுத்தல், குதிரை படைக்கலம் புறப்படுதல், படைக்கலம் சன்னிதி அடைதல், பரிவார மூர்த்திகள், கன்னிமார், கருப்பராயன் முனீஸ்வரன் சிறப்பு வழிபாடு, அம்மை அழைத்தல் ஆகியன நடந்தது.

குண்டம் இறங்குதற்காக பெருமாநல்லூர், பூண்டி, கணக்கம்பாளையம், வலையபாளையம், ஈட்டி வீரம்பாளையம், அவினாசி உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து பக்தர்கள் 40 நாட்கள் விரதம் இருந்து மஞ்சள் நிற ஆடைகளைக்கட்டி பூவோடு ஏந்தி பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் கோவிலின் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த 60 அடி குண்டத்தில் இறங்குவதற்காக 2 கிலோமீட்டர் தூரத்திற்கு வரிசையில் கைக்குழந்தைகளுடன் காத்திருந்தனர்.



அதிகாலை 3 மணியளவில் கோவில் பூசாரி முதன்முதலில் பயபக்தியுடன் குண்டம் இறங்கினார். இதையடுத்து, வீரமக்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி, கொண்டத்து காளியம்மனை வழிபாடுசெய்தனர். இந்த குண்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இறங்கினார்கள். அதை தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகாதீபாராதனைகளும், கூட்டு வழிபாடுகளும் நடந்தது.

பின்னர் காலை 10 மணிக்கு குண்டம் மூடுதல், சிறப்பு அக்னி அபிஷேகம், அம்மன் பூத வாகன காட்சியுடன் புறப்பாடு ஆகியன நடந்தது. மாலை 4 மணியளவில் அம்மன் சிங்க வாகனத்தில் தேரில் எழுந்தருளி காட்சி அளித்தார். பின்னர் மாலை 5.30 மணியளவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.விஜயகுமார் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Similar News