ஆன்மிகம்
பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோவில்

ஊரடங்கு உத்தரவால் பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோவில் சித்திரை திருவிழா ஒத்தி வைப்பு

Published On 2020-04-21 13:04 IST   |   Update On 2020-04-21 13:04:00 IST
ஊரடங்கு உத்தரவு காரணமாக பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோவில் சித்திரை திருவிழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கோவில் செயல் அலுவலர் கூறியுள்ளார்.
தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் பிரசித்தி பெற்ற நீலகண்ட பிள்ளையார் கோவில் உள்ளது. இந்த கோவிலின் சித்திரை திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறும். ஒவ்வொரு நாளும் திருவிழா தனித்தனி மண்டகப்படிதாரர்களால் நடத்தப்பட்டு சுவாமி வீதியுலா, சுவாமிக்கு அபிஷேக ஆராதனை, மற்றும் பட்டிமன்றம், இசை நிகழ்ச்சி, என பேராவூரணி பகுதி மட்டுமின்றி அதன் சுற்று வட்டாரங்களில் மிகவும் பிரபலமாக திருவிழா நடைபெறும்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் திருவிழா தொடங்கி 9-வது நாள் நடைபெறும். அன்றைய தினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவர். பால்குடங்கள், காவடிகள், பறவைக்காவடி, தொட்டில் காவடி, பெண்கள் கோவிலைச் சுற்றியும், தேர் வீதிஉலா தெருவிலும் கும்பிடுதனம் போட்டு தங்களது நேர்த்தி கடனை செலுத்துவது என பக்தர்கள் பல்வேறு வழிகளிலும் தங்களது நேர்த்திகடனை செலுத்துவார்கள்.

தஞ்சை மாவட்டத்திலேயே மிகவும் சிறப்பாக நடக்கக்கூடிய திருவிழா என்றால் அது பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோவில் திருவிழாதான். அப்படிப்பட்ட திருவிழாவை நடத்த இரு மாதங்களுக்கு முன்பே தேதி குறிப்பிடப்பட்டு வருகிற ஏப்ரல் 28-ந் தேதி சித்திரை திருவிழா தொடங்கி அடுத்த மாதம்(மே) 9-ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 6-ந் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இந்த தடை உத்தரவு வருகிற 3-ந் தேதி வரை அமலில் இருப்பதால் சித்திரை திருவிழா ஒத்தி வைக்கப்படுவதாக கோவில் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார். ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்ட பின்னர் சித்திரை திருவிழா நடத்துவது குறித்து அனைத்து அரசு அதிகாரிகளையும் கலந்து ஆலோசித்து பின்னர் முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Similar News