திருவாடானை சினேகவல்லி அம்மன் கோவில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றம்
- 21-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
- 24-ந்தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
திருவாடானை சினேகவல்லி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோவில் ஆடிப்பூரத் திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம் நேற்று மாலை நடைபெற்றது. அம்மன் சன்னதியில் உள்ள கொடிமரத்திற்கு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது. கொடியேற்றமும், காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தேவஸ்தான சரக பொறுப்பாளர் பாண்டியன், 22 கிராம நாட்டார்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். பூஜைகளை ஆலய குருக்கள் வைரமணிசிவம், ரவி, சுப்பிரமணிய குருக்கள், சந்திரசேகர் மற்றும் சிவாச்சாரியார்கள் நடத்தினர். தொடர்ந்து சுவாமி அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. 15 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலை, மாலையில் சுவாமி, அம்மன் பரிவார தெய்வங்களுடன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
முக்கிய நிகழ்ச்சியாக 21-ந் தேதி தேரோட்டமும், 24-ந் தேதி சுவாமி-அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன், தேவஸ்தான சரக பொறுப்பாளர் பாண்டியன், கிராம நாட்டார்கள் செய்து வருகின்றனர்.