ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
- 5-ந்தேதி கருட சேவை நடைபெறுகிறது.
- 9-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள நவத்திருப்பதி கோவில்களில் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலும் ஒன்றாகும். இக்கோவிலில் மாசி திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும்.
அதன்படி. இந்த ஆண்டுக்கான மாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலையில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், திருமஞ்சனம், தீர்த்த வினியோக கோஷ்டி நடைபெற்றது.
காலை 6.45 மணிக்கு சுவாமி நம்மாழ்வார் கொடிமரம் முன்பாக எழுந்தருளினார். 7.30 மணிக்கு கொடிப்பட்டம் சுற்றி வந்து மாசி திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.
விழா நாட்களில் தினமும் மாலையில் சுவாமி நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும்.
வருகிற 5-ந் தேதி கருட சேவை நடைபெறுகிறது. 9-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. 10-ந் தேதி இரவில் சுவாமி நம்மாழ்வார், சுவாமி பொலிந்துநின்றபிரான் எழுந்தருளும் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.
11-ந்தேதி இரவில் சுவாமி நம்மாழ்வார் எழுந்தருளும் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது.