தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் இன்று நடக்கிறது
- தஞ்சை பெரிய கோவில் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
- கருவறையில் உள்ள பெருவுடையார் மிகப்பெரிய லிங்கத்திருமேனியாகும்.
தஞ்சை பெரிய கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது உலக பாரம்பரிய சின்னமாக விளங்குவதோடு, தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். பெரியகோவிலில் கருவறையில் உள்ள பெருவுடையார் மிகப்பெரிய லிங்கத்திருமேனியாகும். 6 அடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட பீடமும், அதன்மேல் 13 அடி உயரம், 23 அடி சுற்றளவும் உள்ள லிங்கம் எனத் தனித்தனி கருங்கற்களினால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சிறப்பு மிக்க பெருவுடையாருக்கு ஐப்பசி பவுர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இன்று (திங்கட்கிழமை) ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் வழங்கிய அரிசியை சாதமாக தயார் செய்து, பெருவுடையார் திருமேனி முழுவதும் சாத்தப்பட்டு, காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு, அன்னாபிஷேகம் நடைபெறவுள்ளது.
பின்னர் மாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.