மேலக்காட்டுவிளை கைலாசநாதர் கோவிலில் சித்திரை திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
- 21-ந்தேதி குருசுவாமி ரத வீதியை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
- 22-ந்தேதி கானியாளர் சுவாமி ஊர்வலமாக பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
நாகர்கோவில் அருகே உள்ள மேலக்காட்டுவிளை ஊர் கைலாசநாதர் சாமி கோவிலில் சித்திரை பெருந்திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 23-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. நாளை அதிகாலையில் ஊர் மக்கள் முக்கடலும் சங்கமிக்கும் குமரி கடலில் நீராடி புனித தீர்த்தம் எடுத்து வருதலும், அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமமும், வருஷாபிஷேகமும், 108 கலச பூஜை, சாமிகளுக்கு சிறப்பு யாகசாலை பூஜை, அபிஷேகம், சிறப்பு பூஜையும் நடைபெறுகிறது.
காலை 9.30 மணிக்கு கொடி ஏற்றப்படுகிறது. இதற்கு ஊர் தலைவர் வக்கீல் வை.செல்வகுமார் தலைமை தாங்குகிறார். துணைத் தலைவர் சு.திருநாமச்செல்வன், செயலாளர் சு.கண்ணன், பொருளாளர் சி. ஜெயகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் அமைச்சர் என். தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர் பி.முத்துராமன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் திருக்கொடி ஏற்றுவதை தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து சாமிகளுக்கு அலங்கார தீதனையும், 12 மணிக்கு பிரசாதம் வழங்குதலும், பொது மக்களுக்கு கை நீட்டம் வழங்குதலும், அன்னதர்மமும் நடைபெறுகிறது.
மாலை 6 மணிக்கு மேலக்காட்டுவிளை ஊர் லெட்சுமி அம்மை மகளிர் மன்றத்தார் சார்பாக 108 திருவிளக்கு பூஜை நடக்கிறது. இரவு 8 மணிக்கு சாமிகளுக்கு அலங்கார தீதனையும் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.
இதே போல் விழா நாட்களில் தினமும் திருப்பள்ளி எழுச்சி, சாமிகளுக்கு சிறப்பு பூஜைகளும், தீதனைகளும் நடக்கிறது. நாளை மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கு பால விநாயகருக்கு அபிஷேகமும், இரவு 7:15 மணிக்கு பால விநாயகர் உற்சவராக கோவில் சுற்று ரத வீதியில் பவனி வருதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 21-ந்தேதி பகல் 1 மணிக்கு குருசுவாமிக்கு அலங்கார தீதனையும், இரவு குருசுவாமி ரத வீதியை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சியும், 22-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு கானியாளர் சுவாமிக்கு அபிஷேகமும், தீதனையும், மாலையில் கானியாளர் சுவாமி ஊர்வலமாக பவனி வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
23-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகமும், தீதனையும், காலை 6 மணிக்கு பொங்கல் வழிபாடு, மதியம் 1 மணிக்கு பத்திரகாளியம்மனுக்கு உச்சகால அலங்கார தீதனையும், நள்ளிரவு 11 மணிக்கு கொடி இறக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் நிர்வாகிகள் தலைமையில் ஊர் மக்கள் செய்து வருகிறார்கள்.