- வாசனையுள்ள மலர்களால் குத்துவிளக்கை அலங்கரிக்க வேண்டும்.
- திரு விளக்கை அலங்கரித்து பூஜை செய்ய மங்கலம் பொங்கும்.
ஐந்து முகக் குத்து விளக்கைப் பளிச்சென்று துலக்கி ஈரம் போகத் துடைத்து, ஐந்து முகங்களிலும் குங்குமம், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் பொட்டு வைக்க வேண்டும். பிறகு பீடத்திற்கும் குங்குமம், மஞ்சள், சந்தனப் பொட்டு வைக்க வேண்டும். பிறகு நல்ல வாசனையுள்ள மலர்களால் குத்துவிளக்கை அலங்கரிக்க வேண்டும்.
குத்துவிளக்கின் அடிப்பாகத்தில் பூச்சூட்டும் போது ஈன்ற தாயை, பிறந்த வீட்டை, அவர்கள் நலனை வேண்டி பூச்சூட வேண்டும்.
நடுப்பகுதியில் பூச்சூட்டும் போது, கணவன், குழந்தைகள், புகுந்த வீட்டை நினைத்து, இல்லறம் நல்லறமாய் இருக்க பிரார்த்தனை செய்து பூச்சூட வேண்டும்.
உச்சிப் பகுதியில் பூச்சூட்டும் போது, "தீப லட்சுமியே! உன் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டும்" என்று மனமுருக வேண்டி பூச்சூட வேண்டும்.
இவ்வாறு திரு விளக்கை அலங்கரித்து பூஜை செய்ய மங்கலம் பொங்கும்.
விளக்கிற்கு ஏற்ற ஆசனம்
விளக்குகளை வெறும் தரையில் வைக்கக்கூடாது! அவற்றை வெள்ளி, செம்பு, பித்தளை, பஞ்சலோகம் முதலியவற்றால் ஆன ஒரு தாம்பளத்தின் மீதே வைக்க வேண்டும். அல்லது மரத்தினால் ஆன பலகையின் மீதாவது வைத்து, திருவிளக்கிற்கு ஏற்ற ஆசனத்தை அமைக்க வேண்டும்.
விளக்கிற்கு பொட்டு இடுதல்!
விளக்கிற்கு விபூதி, குங்குமம், மஞ்சள், சந்தனம் என உச்சியில் ஒரு பொட்டும், அதன் கீழ் மூன்றும், அதன் கீழ் இரண்டும், அதற்கு அடியில் இரண்டுமாக, ஆக எட்டு இடங்களில் பொட்டிட வேண்டும்.
உச்சியில் இடும் பொட்டு நெற்றியில் இடுவதாகவும் அடுத்த மூன்று பொட்டும் முக்கண் முத்தீ என்கிற சூரியன், சந்திரன், அக்கினி என்று கொள்ள வேண்டும். அடுத்த இரண்டு பொட்டுகள் கைகள் எனவும், கீழே இடும் பொட்டு இரு திருவடிகளாகவும் கருதி, இந்த எட்டு இடங்களிலும் பெட்டிட்டு வழிபட வேண்டும்.