திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்
- 6-ந்தேதி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.
- 7-ந்தேதி தெப்பஉற்சவம் நடக்கிறது.
திண்டுக்கல் நகரில் கேட்டவருக்கு கேட்ட வரம் தரும் சக்தியாக விளங்கும் கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா கடந்த மாதம் 3-ந்தேதி முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
விழாவை முன்னிட்டு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் எடுத்து வந்தும், தீச்சட்டி எடுத்து வந்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தில்லைதெரு பொடிக்கார வெள்ளாளர் மண்டகப்படி நேற்று நடைபெற்றது.
இரவு அலங்கார மின்னொளி ரதத்தில் கோட்டை மாரியம்மன் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று காலை 6 மணிக்கு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்காக கோவில் முன்பு அமைக்கப்பட்ட குண்டத்தில் பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். கையில் தீச்சட்டி எடுத்தும், அலகு குத்தியும், குழந்தைகளை சுமந்தபடியும் பக்தர்கள் பூக்குழி இறங்கிய காட்சி மெய்சிலிர்க்க வைத்தது. மேலும் இன்று மாலை திருத்தேர் உலா நடைபெறுகிறது. நாளை (4-ந்தேதி) தசாவதாரம், 5-ந்தேதி மஞ்சள்நீராட்டுதல் நடைபெறும். 6-ந்தேதி ஊஞ்சல் உற்சவமும், 7-ந்தேதி தெப்பஉற்சவமும் நடைபெறுகிறது. திருவிழாவை காண ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டு சென்ற வண்ணம் உள்ளனர்.