வழிபாடு
திருவட்டார் கோவிலில் கருவறையில் விழுந்த சூரிய ஒளி பக்தர்கள் பரவசம்
- இந்த கோவிலில் கடந்த ஜூலை மாதம் 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது.
- செப்டம்பர் 19-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை சூரியக்கதிர்கள் ஆதிகேசவப் பெருமாளின் திருமேனியில் விழும்.
திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் கடந்த ஜூலை மாதம் 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்த கோவிலில் செப்டம்பர் மாதம் 19-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை மாலையில் சூரியக்கதிர்கள் கருவறை வரை பாய்ந்து ஆதிகேசவப் பெருமாளின் திருமேனியில் விழும் அதிசயம் நடைபெறும். பெருமாளுக்கு உகந்த தமிழ் மாதமான புரட்டாசி மாத தொடக்கத்தில் மாலைச்சூரியனின் பொன்னிற கதிர்கள் பெருமாளின் திருமேனியில் விழும் வகையில் கோவிலை வடிவமைத்துள்ளனர்.
இந்தநிலையில், நேற்று மாலையில் சூரியனின் மஞ்சள் நிறக்கதிர்கள் கண்களை கூசச்செய்யும் விதத்தில் பாய்ந்து கருவறையில் பெருமாள் மீது விழுந்தது. இதைப் பார்த்து பக்தர்கள் பரவசமடைந்தனர். இந்த அபூர்வ காட்சியை இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணியளவில் காணலாம்.