வழிபாடு

திருவெள்ளறை பெருமாள் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

Published On 2023-03-19 06:53 GMT   |   Update On 2023-03-19 06:53 GMT
  • தேரோட்டத்தை முன்னிட்டு அன்னதானம், நீர் மோர், பானகம் வழங்கப்பட்டது.
  • பெருமாள்- தாயார் தேரில் எழுந்தருளினார்.

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலாகும். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக்கான தேரோட்ட விழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று இரவு ஹனுமந்த வாகனத்தில் பெருமாள் புறப்பாடாகி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 12-ந்தேதி அதிகாலை 2 மணிக்கு பெருமாள் தாயார் அனந்தராயர் மண்டபத்திலிருந்து பல்லக்கில் புறப்பாடாகி வழிநடை உபயங்கள் கண்டருளி ஸ்ரீரங்கம் வட காவிரி ஆஸ்தான மண்டபத்திற்கு சென்றடைந்தார்.

தொடர்ந்து 13-ந்தேதி அதிகாலை 1.30 மணிக்கு வழிநடை உபயங்கள் கண்டருளி கண்ணாடி அறை சென்றடைந்தார். அன்று இரவு கருடவாகனத்திலும், அடுத்தடுத்த நாட்களில் காலையில் ஹம்சவாகனம், இரவில் சேஷவாகனம், சிம்மவாகனம், யானைவாகனம் போன்ற வாகனங்களில் பெருமாள் எழுந்தருளினார். 16-ந்தேதி நெல்அளவு கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று முன்தினம் குதிரைவாகனத்தில் பெருமாள் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக பெருமாள்- தாயார் காலை 5.30 மணிக்கு தேரில் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க, அதிர்வேட்டுகள் ஒலிக்க 12.30 மணிக்கு தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர், தேரோடும் வீதி வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு பல்வேறு அமைப்புகளின் சார்பாக அன்னதானம், நீர் மோர், பானகம் வழங்கப்பட்டது.குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஊராட்சி தலைவர் லதாகதிர்வேலு தலைமையில் துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் செய்திருந்தனர். திருவெள்ளறை ஊராட்சியின் 3-வது வார்டு முன்னாள் உறுப்பினர் கே.ஏ. வடிவேல் மற்றும் அதிகாரிகள் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News