இனி உடல் எடையை...வயிற்றுடன் அளக்க வேண்டும்
- தற்போது அறிமுகமாகியுள்ளது பாடி வால்யூம் இன்டிகேட்டர் (BVI).
- இச்சோதனை பி.வி.ஐ. ஆப் சோதனை மூலம் நடைபெறுகிறது
தற்போது உடல் எடையை உயரத்துடன் தொடர்புபடுத்தி அளவிடும் பாடி மாஸ் இன்டெக்ஸ் (BMI) புழக்கத்தில் உள்ளது. 1830-க்குப் பிறகு அடால்ப் க்யூடெலட் என்ற பெல்ஜிய கணிதவியலாளரால் கண்டறியப்பட்ட இம்முறை தோராயமானது. தற்போது இதற்கு மாற்றாக அறிமுகமாகியுள்ளது, பாடி வால்யூம் இன்டிகேட்டர் (BVI).
உடலின் மொத்த எடையோடு, வயிற்றிலுள்ள கொழுப்பையும் அளவிட்டு ஆரோக்கியமான எடை அளவு கணக்கிடப்படுகிறது. இச்சோதனை பி.வி.ஐ. ஆப் சோதனை மூலம் நடைபெறுகிறது. வயிற்றிலுள்ள கொழுப்புக்கும், இதய மற்றும் நீரிழிவு நோய்களுக்கும் உள்ள தொடர்பு உலகறிந்த ஒன்று.
2012-ல் எடுக்கப்பட்ட ஆய்வுப்படி உடல்பருமனால் பாதிக்கப்பட்ட 3 லட்சம் ஐரோப்பியர்களில் பலருக்கும் இடுப்பின் அளவு 34-40 அங்குலம் இருந்ததை சுட்டிக்காட்டுகிறார் மேயோ கிளினிக் ஆராய்ச்சிக்குழுவைச் சேர்ந்த மருத்துவர் ஜோஸ் மெதினா இனோஜோஸா. பி.எம்.ஐ. பின்தங்கியது, இடுப்பில் சேரும் கொழுப்பை அளவிடுவதில்தான். பி.வி.ஐ. உடல் எடையையும், வயிற்றிலுள்ள கொழுப்பையும் துல்லியமாக பாடி இமேஜ் முறையில் அளவிடுகிறது.