செய்திகள்

விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும் கட்சி பா.ஜ.க.தான்: தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு

Published On 2016-10-16 16:59 IST   |   Update On 2016-10-18 13:47:00 IST
தமிழக விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும் கட்சி பாரதீய ஜனதா தான் என்று தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

பவானி:

பவானி அடுத்த லட்சுமி நகரில் பா.ஜனதாவின் மாநில விவசாய அணி செயற்குழு கூட்டம் நடந்தது. அதன் தலைவர் பொன் விஜயராகவன் தலைமை தாங்கினார். மாநில விவசாய அணி பொது செயலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார்.

இந்த கூட்டத்தில் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

முல்லை பெரியாருக்காக கேரளாவிடமும், பாலாறுக்காக ஆந்திராவிடமும், காவிரிக்காக கர்நாடகாவிடமும் தண்ணீருக்காக கையேந்திக் கொண்டு இருக்கிறோம். தி.மு.க. ஆட்சியில் இருந்த போது முல்லை பெரியாறு, பாண்டியாறு திட்டம், தாமிரபரணி ஆற்று படுக்கை திட்டம் ஆகியவற்றை கிடப்பில் போட்டு விட்டது. 2007 முதல் 2013 வரை கூட்டணி ஆட்சியில் இருந்த காங்கிரஸ் காவிரி பிரச்சினையை தீர்க்க அத்தனை அம்சங்களும் கையில் இருந்தும், அதை தவறவிட்டு விட்டு இப்போது மத்திய அரசை குறை சொல்கிறது. இவர்கள் இப்போது உண்ணாவிரதம் வேறு இருக்கிறார்களாம் வேடிக்கையாக இருக்கிறது.

ஆனால் தமிழக விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும் கட்சி பாரதீய ஜனதா தான். உச்சநீதிமன்ற அமர்வு வரும் போது தமிழகத்துக்கு சரியான நியாயம் கிடைக்கும்.

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

கூட்டத்தில் காவிரி பிரச்சினையில் எதையும் மதிக்காத கர்நாடக அரசை கண்டிப்பது உள்பட 16 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

கூட்டத்தில் அகில பாரத விவசாய அணி தலைவர் விஜய்பால் சிங்தோமர், சத்புகுமார், மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் கதிர்வேல் நன்றி கூறினார்.

இதைதொடர்ந்து திருப்பூரில் நடக்கும் பாரதிய ஜனதா செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழிசை சவுந்திரராஜன் திருப்பூருக்கு புறப்பட்டு சென்றார்.

Similar News