செய்திகள்

தமிழக அரசியல் குழப்பத்திற்கு மத்திய அரசு தான் காரணம்: தா.பாண்டியன் பேட்டி

Published On 2017-02-19 21:06 IST   |   Update On 2017-02-19 21:06:00 IST
முதல்-அமைச்சர் இனிமேல் ஒவ்வொரு நாளும் சோதனைகளை சந்தித்து தான் பொறுப்பை நீட்டிக்க முடியும் என்று தா. பாண்டியன் கூறினார்.

கோவை:

கோவையை அடுத்த சின்னியம்பாளையத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி யின் சூலூர் வட்டார மாநாடு நடைபெற்றது. இதில் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தற்போது தமிழகத்தில் நடக்கும் அரசியல் குழப்பங்களுக்கு மத்திய அரசு தான் காரணம். தற்போது நடைபெறும் சம்பவங்கள் அனைத்தும் 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மத்திய பாரதீய ஜனதா அரசினால் நடத்தப்படுபவை.

முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்கு இருந்த மக்கள் செல்வாக்கு தற்போது சட்டமன்றத்திற்கு உள்ளே இருப்பவர்களுக்கு இல்லை. தற்போது முதல்-அமைச்சர் பொறுப்பு என்பது மலர் கிரீடம் அல்ல அது முட்கிரீடம். தமிழக முதல்-அமைச்சர் இனிமேல் ஒவ்வொரு நாளும் சோதனைகளை சந்தித்து தான் பொறுப்பை நீட்டிக்க முடியும்.

சட்டமன்றத்தில் சட்ட மன்ற உறுப்பினர்கள் தங்களது உடல் வலிமையின் பலத்தை காட்டக்கூடாது. தங்களுக்கு சட்டப்படி வழங்கப்பட்ட வாக்குரிமையை மட்டுமே பயன்படுத்தி இருக்க வேண்டும். ரகசிய வாக்கெடுப்பு என்று இல்லாமல் எப்படி வாக்கெடுப்பு நடத்தி இருந்தாலும் அந்தந்த கட்சிக்கு உள்ள பலம் தான் நிரூபிக்கப்பட்டு இருக்கும்.

எதிர்கட்சிகள் இல்லாமல் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு செல்லாது என சொல்ல முடியாது. முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி மக்கள் நலனை தவிர வேறு எதுவும் தேவை இல்லை, மக்களிடம் நற்பெயர் எடுப்பதே நோக்கம் என செயல்பட வேண்டும்.

அண்டை மாநிலங்களுடனான நதிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News