சசிகலா அறிவுரையின் பேரில் பா.ஜ.க.வுக்கு ஆதரவா?: தம்பித்துரை பேச்சுக்கு அ.தி.மு.க. எம்.பி.க்கள் எதிர்ப்பு
சென்னை:
அ.தி.மு.க. எம்.பி. அருண் மொழி தேவன் இன்று சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அ.தி.மு.க. கட்சி நடவடிக்கைகளில் இருந்து சசிகலாவையும், அவர் குடும்பத்தினரையும் விலக்கி வைப்பதாக முதன் முதலில் கூறியவர் தம்பித்துரைதான். ஆனால் தற்போது அவர் சசிகலா உத்தரவின் பேரில்தான் ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளருக்கு அ.தி.மு.க. ஆதரவு கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.
தம்பித்துரையின் பேச்சு முன்னுக்கு பின் முரணாக உள்ளது. அவரது பேச்சு எங்களுக்கெல்லாம் அதிர்ச்சி தருவதாக உள்ளது.
சசிகலாவின் அறிவுரைப் படி பா.ஜ.க.வுக்கு ஆதரவு என்று அவர் சொல்வது மனதை புண்படுத்துவதாக அமைந்துள்ளது. இவை எல்லாம் தம்பித்துரையின் சொந்த கருத்துகள்.
இந்த கருத்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
இவ்வாறு அ.தி.மு.க. எம்.பி. அருண்மொழித்தேவன் கூறினார்.
அவருடன் திருத்தணி அரி எம்.பி. மற்றும் முருகுமாறன் எம்.எல்.ஏ. ஆகியோரும் உடனிருந்தனர்.
அ.தி.மு.க. ஆட்சியையும், கட்சியையும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிகசிறப்பாக நடத்தி கொண்டிருக்கிறார். அவருக்கு அ.தி.மு.க. எம்.பி.க் கள், எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது.
இதனால்தான் ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளரை ஆதரிக்கும்படி அவரை தொடர்பு கொண்டு பிரதமர் கேட்டுக்கொண்டார். இதையடுத்து அவர் அ.தி.மு.க.வின் நிர்வாகிகளின் கூட்டத்தை கூட்டி பா.ஜ.க.வுக்கு ஆதரவளிக்கும் முடிவை எடுத்தார்.
ஆனால் தம்பித்துரை டெல்லி சென்று பேட்டியளிக்கும் போது, ‘‘சசிகலா அறிவுரைப்படி பா.ஜ.க. வுக்கு அ.தி.மு.க. ஆதரவு கொடுக்கிறது என்று கூறியுள்ளார். அவரது இந்த கருத்து தவறானது.
தம்பித்துரையின் பேச்சுகள் குழப்பத்தையே ஏற்படுத்துகின்றன. இது வருத்தம் தருகிறது. அவர் சுயநலம் கருதி இப்படி பேசி கொண்டிருக்கிறார். அ.தி.மு.க.வை ராணுவ கட்டுப்பாடுடன் நடத்த வேண்டியது அவசியமாகும்’’.
இவ்வாறு திருத்தணி அரி எம்.பி. கூறினார்.