செய்திகள்

உள்ளாட்சி தேர்தலில் த.மா.கா. பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறும்: ஜி.கே.வாசன்

Published On 2017-11-24 09:56 IST   |   Update On 2017-11-24 09:56:00 IST
உள்ளாட்சி தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறும் என அதன் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
ஈரோடு:

த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னம் ஒதுக்கீட்டில் தற்போது தீர்ப்பு கூறி உள்ளது. எதிரணியினர் அதை ஏற்க மறுப்பதுடன் கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளதாகவும் கூறி உள்ளனர்.

அதற்கு சட்டத்தில் இடம் இருந்தால் தொடரட்டும் அது அவர்களது விருப்பம். காங்கிரஸ் கட்சியினர் ராகுல்காந்தியை தலைவராக தேர்ந்து எடுப்பது அந்த கட்சியின் விருப்பம். அதில் எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை.

தமிழக கவர்னர் அரசு அதிகாரிகளுடன் ஆய்வு நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கவர்னருக்கான கோட்பாடுகள் வரையறுக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசுக்கும், உள்துறை அமைச்சகத்துக்கும் இது நன்றாக தெரியும். இனி மேலாவது கவர்னர் ஆய்வு செய்வதை தவிர்க்க வேண்டும்.


உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்படும் என எதிர்பார்க்கிறேன். இதுவரை தனித்து நின்றே கட்சியை பலப்படுத்தி வருகிறோம். உள்ளாட்சி தேர்தலில் த.மா.கா. பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறும். தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதா? என்பது குறித்து பிறகுதான் முடிவு எடுக்கப்படும். மக்களின் மனநிலையை பொறுத்து கூட்டணி குறித்து பேசி முடிவு எடுக்கப்படும்.

கர்நாடகம் தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய காவிரி தண்ணீரை தொடர்ந்து கொடுக்காமல் வஞ்சித்து வருகிறது. மத்திய அரசும் இதைகண்டு கொள்வது இல்லை. தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும்.

பேட்டியின்போது, மாநில பொதுச்செயலாளர் விடியல்சேகர், மாநில இளைஞர் அணி தலைவர் யுவராஜா, மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார், செயற்குழு உறுப்பினர் எஸ்.டி. சந்திரசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.

Similar News