இன்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில் சரிவை சந்தித்த சென்செக்ஸ், நிஃப்டி
- பிப்ரவரி மாதத்தில் 8 நாட்கள் பங்குச் சந்தை சரிவை எதிர்கொண்டுள்ளது.
- சென்செக்ஸ் 2,644.60 புள்ளிகளும், நிஃப்டி 810 புள்ளிகள் சரிந்துள்ளன.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதில் இருந்து மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி சரிவை சந்தித்து வருகின்றன.
குறிப்பாக இந்த மாதம் (பிப்ரவரி) இதுவரை, பங்குச் சந்தைகள் செயல்பட்ட 11 நாட்களில் 8 நாட்கள் சென்செக்ஸ், நிஃப்டி சரிவை சந்தித்துள்ளன. இதற்கு முக்கிய காரணம் வெளிநாட்டு நிதி தொடர்ந்து வெளியேறுவது, கார்ப்பரேட் நிறுவனங்களின் 3-வது காலாண்டு வருமான அறிக்கை முக்கிய காரணம் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 199.76 புள்ளிகள் சரிந்து 75,939.21 புள்ளிகளில் நிறைவடைந்தது. இது 0.26 சதவீதம் சரிவு ஆகும். இன்று காலை வர்த்தகத்தின்போது 699.33 புள்ளிகள் குறைந்து 75,439.64 புள்ளிகளில் வர்த்தகமானது. அதன்பின் சுமார் 500 புள்ளிகள் உயர்ந்து 199.76 புள்ளிகள் சரிவில் வர்த்தகம் முடிவடைந்தது.
அதேபோல் இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 102.15 புள்ளிகள் 22,929.25 புள்ளிகளில் நிறைவடைந்தது.
சென்செக்ஸ் 8 நாட்களில் 2,644.6 புள்ளிகள் சரிந்துள்ளது. இது மொத்த புள்ளிகளில் 3.36 சதவீதம் ஆகும். நிஃப்டி 810 புள்ளிகள் சரிந்துள்ளன. இது 3.41 சதவீதம் ஆகும்.
30 பங்குகளை அடிப்படையாக கொண்ட மும்பை பங்குச் சந்தையில் அதானி போர்ட்ஸ் பங்கு 4 சதவீதத்திற்கு மேல் சரிவை சந்தித்தது. அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ், சன் பார்மா, இந்துஸ்இண்ட் பேங்க், என்டிபிசி, டாடா ஸ்டீல் நிறுவன பங்குகளும் சரிவை சந்தித்தன.
நெஸ்லே, ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஹெ.சி.எல்.டெக் நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டன.
இன்றைய ஆசிய பங்குச் சந்தைகளில் டோக்கியோ பங்குச் சந்தை சரிவில் முடிவடைந்தது. சியோல், ஷாங்காய், ஹாங் காங் பங்குச் சந்தைகள் உயர்வை சந்தித்தன.
அந்நிய முதலீட்டாளர்கள் நேற்றைய வர்த்தகத்தில் 2789.91 கோடி ரூபாய் மமதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.