பல்லடத்தில் கார் திருடிய வழக்கில் 2பேர் கைது
- போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை வைத்து விசாரணை செய்து வந்தனர்.
- கார் ஒன்றை நிறுத்தி விசாரணை செய்தபோது அதில் இருந்த வாலிபர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.
பல்லடம் :
கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த ரத்தினசாமி என்பவரது மகன் ரேமன்ஸ் ராய் (வயது 45). இவர் கடந்த மாதம் பல்லடம் அருகே உள்ள லட்சுமி மில் பகுதியில் வசிக்கும் இவரது மாமனார் வீட்டிற்கு காரில் வந்துள்ளார். இரவு அங்கு தங்கி விட்டு மறுநாள் காலை பார்த்த போது கார் காணவில்லை.கார் திருடப்பட்டிருந்தது.
இது குறித்து அவர் பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை வைத்து விசாரணை செய்து வந்தனர். இந்தநிலையில் நேற்று பல்லடம்- தாராபுரம் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியே வந்த கார் ஒன்றை நிறுத்தி விசாரணை செய்தபோது அதில் இருந்த வாலிபர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.
இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்ட போது, அவர்கள் கடந்த மாதம் லட்சுமி மில் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரை திருடியது தெரியவந்தது. மேலும் போலீசார் விசாரணையில் அவர்கள் சென்னை அருகே உள்ள திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் மகன் சக்திவேல்(வயது 23), ஏகாம்பரம் மகன் பாரத் (22) என்பதும் இருவரும் சேர்ந்து கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களை திருடி விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 1 கார்,2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.