மேட்டூர்:
சென்னை காஞ்சிபுரத்தை சேர்ந்த சிறுமிகள் சுஜித்ரா (வயது 11), சசிரேகா (7) ஆகியோர் பள்ளி விடுமுறையை யொட்டி சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர், சேத்துக்குழி பகுதியில் உள்ள பாட்டி பாப்பாத்தி (65) வீட்டுக்கு வந்தனர்.கடந்த 10-ந்தேதி பாப்பாத்தி, துணி துவைப்பதற்காக அருகாமையில் உள்ள காவிரி நீர் தேக்க பகுதிக்கு சென்றார். அப்போது பேத்திகள் சுஜித்ரா, சசிரேகா ஆகியோரையும் உடன் அழைத்து சென்றார். அங்கு காவிரி ஆற்றில் இறங்கி விளையாடியபோது, 2 சிறுமிகளும் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.
இந்த சம்பவத்தை அடுத்து அங்கு மேலும் உயிரிழப்புகள் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக நீர்வளத்துறை சார்பில் மேட்டூர் அலுவலக அதிகாரிகள் எச்சரிக்கை பலகை வைக்க நடவடிக்கை எடுத்தனர். அதன்படி கொளத்தூர், சேத்துக்குழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காவிரி நீர் தேக்க பகுதியில் கரையோரமாக எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். அதில், ஆற்றின் ஆழமான பகுதி, ஆற்றில் இறங்க, குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.