திண்டுக்கல் அருகே பேக்கரியில் சிலிண்டர் வெடித்து 2 ஊழியர்கள் படுகாயம்
- ஊழியர்கள் டீ போடுவதற்காக சிலிண்டரை பற்ற வைத்தபோது எதிர்பாராத விதமாக வெடித்து தீ பிடித்தது.
- கடையில் கூட்டம் எதுவும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே கன்னிவாடியில் பேக்கரி கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் தர்மத்துப்பட்டி நடுத்தெருவை சேர்ந்த மதுரைவீரன் (வயது45) என்பவர் டீ மாஸ்டராகவும், தர்மத்துப்பட்டி டைமன் நகரை சேர்ந்த தண்டபாணி (53) என்பவர் வடை மாஸ்டராகவும் வேலை பார்த்து வருகின்றனர்.
இன்று காலை கடையை திறந்து டீ போடுவதற்காக சிலிண்டரை பற்ற வைத்தபோது எதிர்பாராத விதமாக வெடித்து தீ பிடித்தது. இதில் மதுரை வீரன் மற்றும் தண்டபாணிக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் ெதரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
கடையில் கூட்டம் எதுவும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இச்சம்பவத்தில் கடையின் ஒரு பகுதியும் சேதம் அடைந்தது. இது குறித்து கன்னிவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.