செய்திகள்

சூலூர் அருகே முன்விரோதம் காரணமாக பஞ்சு குடோனுக்கு தீ வைப்பு? போலீசார் விசாரணை

Published On 2016-06-07 15:29 IST   |   Update On 2016-06-07 15:29:00 IST
சூலூர் அருகே முன்விரோதம் காரணமாக பஞ்சு குடோனுக்கு தீ வைத்ததாக வந்த புகாரையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை சூலூரை அடுத்த அரசூரை சேர்ந்தவர் சண்முகம். இவர் மெத்தை தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார்.

இதற்காக பல்வேறு இடங்களில் இருந்து கழிவு பஞ்சுகளை சேகரித்து அப்பகுதியை சேர்ந்த ஒருவரது நிலத்தில் இருப்பு வைத்துள்ளார்.

நேற்று மாலை இந்த கழிவு பஞ்சு கிடங்கில் திடீரென தீ பிடித்தது. அப்போது காற்றும் பலமாக வீசியதால் தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.

இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு கோவை மற்றும் பல்லடத்தில் இருந்து தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் பரவாமல் கட்டுப்படுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்தில் எரிந்த பஞ்சின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

அப்பகுதியில் திருவிழாவையொட்டி பட்டாகள் வெடித்த போது தீப்பொறிகள் பரவி பஞ்சு குடோனில் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. அதே நேரம் முன்விரோதம் காரணமாக பஞ்சு குடோனில் சிலர் தீ வைத்ததாகவும் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சூலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News