விழுப்புரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்: லாரி டிரைவர் பலி
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே உள்ள ராகவன்பேட்டை அண்ணாவீதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 31) லாரி டிரைவர். இவருக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இவர் புதுவையில் இருந்து ராகவன் பேட்டைக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கோலியனூர் அருகே வந்தபோது அந்த வழியாக மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது. 2 மோட்டார் சைக்கிள்களும் திடீரென்று மோதிக்கொண்டன.
இதில் செல்வம் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனளிக்காமல் செல்வம் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வளவனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த 6 மாதத்திற்கு முன்பு செல்வத்தின் தந்தை ராமகிருஷ்ணன் குடும்ப பிரச்சினை காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த துக்கம் தாங்காமல் செல்வத்தின் தாய் பூங்காவனம் சில நாட்களுக்கு முன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்தநிலையில் விபத்தில் செல்வம் பலியானதால் அந்த குடும்பமே சோகத்தில் மூழ்கியது.