செய்திகள்

இரண்டாம் கட்டத்தில் 3 வழித்தடம்: மாதவரத்தில் இருந்து மெட்ரோ ரெயில்-ஜெயலலிதா தகவல்

Published On 2016-07-23 14:25 IST   |   Update On 2016-07-23 14:25:00 IST
வடசென்னை பகுதியான மாதவரத்திலிருந்து மெட்ரோ ரெயில் செயல்படுத்தும் வகையில் தற்போது விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
சென்னை:

மெட்ரோ ரெயில் விரிவாக்க திட்டப்பணி தொடக்க விழாவில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:-

தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் 45.1 கிலோ மீட்டர் நீளத்திற்கான, மெட்ரோ வழித் தடங்கள் எதிர்காலத் தேவைக்கு போதாது என்பதால் எனது தலைமையிலான அரசு, சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டத்தில் மூன்று வழித் தடங்களைச் செயல்படுத்த முடிவெடுத்துள்ளது.

இவ்வழித்தடங்களில், இரண்டு வழித் தடங்கள் வடசென்னை பகுதியான மாதவரத்திலிருந்து செயல்படுத்தும் வகையில் தற்போது விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகின்றது.

இத்திட்டங்களுக்கு நிதியுதவி பெறுவதற்காக ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் 2016ஆம் ஆண்டுக்கான சுழல் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் மத்திய அரசின் ஒப்புதலுக்கு விரைவில் அனுப்பப்படும். மத்திய அரசு அதற்கான ஒப்புதலை விரைந்து வழங்க வேண்டும் என இத்தருணத்தில் வெங்கையா நாயுடுவை, கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News