செய்திகள்

மொரீசியஸ் நாட்டில் நிறுவப்பட உள்ள 2 டன் எடையுள்ள திருவள்ளுவர் சிலை சென்னை வந்தது

Published On 2016-07-26 07:54 IST   |   Update On 2016-07-26 07:54:00 IST
மொரீசியஸ் நாட்டில் நிறுவப்பட உள்ள 2 டன் எடையுடைய திருவள்ளுவர் சிலை நேற்று சென்னை வந்தது. மெரினா கடற்கரையில் இன்றும், நாளையும் பொதுமக்கள் இதை பார்வையிடலாம்.
சென்னை:

தஞ்சாவூரில் உள்ள தமிழ்த்தாய் அறக்கட்டளை சார்பில், மொரீசியஸ் நாட்டின் மோக்கா நகரில் அமைந்துள்ள மகாத்மா காந்தி கல்வி நிறுவனத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட உள்ளது. இதற்காக நாகர்கோவில் அருகே உள்ள மயிலாடியில் நல்லதாணு சிற்பக்கூடத்தில் சிலை வடிவமைக்கப்பட்டது.

2 டன் எடையுடன் 4 அடி உயரத்தில் அமர்ந்திருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இந்த திருவள்ளுவர் சிலை கடந்த 15-ந் தேதி கன்னியாகுமரியில் இருந்து மினி டெம்போவில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. இந்த சிலை நெல்லை, விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், விருத்தாசலம், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், திண்டிவனம், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக நேற்று சென்னை வந்தடைந்தது.

சென்னை எழும்பூரில் உள்ள தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் சிலைக்கு அருகே திருவள்ளுவர் சிலை கொண்டுவரப்பட்ட மினி டெம்போ நிறுத்தப்பட்டது. தமிழ்த்தாய் அறக்கட்டளை செயலாளர் உடையார்கோவில் குணா, புதுவை தமிழ்ச்சங்க தலைவர் வி.முத்து, விழுப்புரம் மாவட்ட தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு தலைவர் துரை.இராசமாணிக்கம் உள்பட நிர்வாகிகள் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் தரமணியில் உள்ள உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன வளாகத்துக்கு திருவள்ளுவர் சிலை கொண்டுசெல்லப்பட்டது. இன்றும் (செவ்வாய்க் கிழமை) மற்றும் நாளையும் சென்னை மெரினா கடற்கரையோரம் உள்ள திருவள்ளுவர் சிலையின் பின்புறம் பொதுமக்கள், தமிழறிஞர்கள் பார்வைக்காக இந்த சிலை வைக்கப்பட உள்ளது. அப்போது திருக்குறள் ஓதப்படும். மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.

தமிழக கவர்னர் கே.ரோசய்யா, முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆகியோர் பார்வையிட்ட பிறகு மொரீசியஸ் நாட்டிற்கு சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பலில் அனுப்பிவைக்கப்படுகிறது.

இதுகுறித்து நிர்வாகிகள் கூறுகையில், “ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை அவமதிப்பு செய்யப்பட்டபோது தமிழ் உணர்வுமிக்க நமது முதல்-அமைச்சர் ஜெயலலிதா அதிருப்தியடைந்து, உடனே நிறுவ நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். திருவள்ளுவர் மீது மிகுந்த மரியாதை கொண்ட ஜெயலலிதா பார்வையிட்ட பின்னரே திருவள்ளுவர் சிலையை மொரீசியஸ் நாட்டுக்கு அனுப்பவேண்டும் என்பது எங்களுடைய விருப்பம்” என்றனர்.

Similar News