செய்திகள்

ராமேசுவரம் அருகே நாளை அப்துல்கலாம் 7அடி உயர வெண்கல சிலை திறப்பு: மத்திய மந்திரிகள் பங்கேற்பு

Published On 2016-07-26 09:36 IST   |   Update On 2016-07-26 09:36:00 IST
ராமேசுவரம் அருகே நாளை (புதன்கிழமை) முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் வெண்கலச்சிலை திறப்பு, அருங்காட்சியகம், தேசிய நினைவகம் போன்றவை அமைக்க அடிக்கல் நாட்டுதல் விழா நடக்கிறது.
ராமேசுவரம்:

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நாளை (புதன்கிழமை) அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டி அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட ராமேசுவரம் அருகே உள்ள பேய்க்கரும்பு நினைவிடத்தில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அங்கு வைப்பதற்காக அப்துல் கலாமின் 7அடி உயர வெண்கலச்சிலை, ஐதராபாத்தில் தயார் செய்யப்பட்டு பேய்க்கரும்பு கொண்டு வரப்பட்டது. நேற்று இரவு அந்த சிலை, அங்கு அமைக்கப்பட்டுள்ள பீடத்தில் நிறுவப்பட்டது.

இதன் திறப்பு விழாவும், மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி வளர்ச்சி அமைப்பு மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பில் அமைக்கப்பட உள்ள கலாமின் தேசிய நினைவகம் மற்றும் அறிவுசார் மையம், மணிமண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நாளை காலை 9 மணிக்கு போய்க்கரும்பில் நடக்கிறது.

மத்திய மந்திரிகள் வெங்கையாநாயுடு, மனோகர் பாரிக்கர் ஆகியோர் தலைமை தாங்குகின்றனர். மத்திய இணை மந்திரிகள் பொன்.ராதாகிருஷ்ணன், சுபாஷ் ராம்ராவ் பாம்ரே, தமிழக அமைச்சர்கள் நிலோபர் கபீல், மணிகண்டன், பாராளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

நாளை நடைபெறும் விழாவில், ராமநாதபுரம் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்கின்றனர்.

இவர்கள் பார்வையிடும் வகையில் நினைவிட பகுதியில் அப்துல்கலாமின் இளமைப்பருவம் முதல் குடியரசு தலைவர் பதவி வகித்தது வரையிலான புகைப்படங்கள், அவரின் படைப்புகள், பயன்படுத்திய பொருட்களை வைத்து தற்காலிக அருங்காட்சியம் அமைக்கப்பட்டுள்ளது

அப்துல்கலாம் முகத்தோற்றத்தை 100 விதங்களில் காண்பிக்கும் மணல் சிற்பங்கள். பூசணிக்காய்களில் அவரது முகம் வடிவமைக்கும் பணிகள் போன்றவையும் முழுவீச்சில் நடந்து வருகின்றன.



நாளை நடைபெறும் விழாவில் ஏராளமானோர் பங்கேற்பார்கள் என்பதால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், துணை கண்காணிப்பாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நினைவு நாள் நிகழ்ச்சியின்போது அப்துல் கலாம் இண்டர்நே‌ஷனல் அறக்கட்டளை சார்பில், ஒரு லட்சம் மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளதாக அப்துல் கலாமின் பேரன் ஷேக் சலீம் தெரிவித்துள்ளார். இதுதவிர அறிவுசார் புத்தகங்களும் வழங்கப்பட உள்ளன.

Similar News