செய்திகள்

தாமிரபரணி ஆற்றில் இருந்து குளிர்பான ஆலைகள் தண்ணீர் எடுக்க தடை விதித்தது ஐகோர்ட்

Published On 2016-11-21 16:29 IST   |   Update On 2016-11-21 16:29:00 IST
தாமிரபரணி ஆற்றில் இருந்து குளிர்பான ஆலைகளுக்கு தண்ணீர் விநியோகம் செய்வதற்கு ஐகோர்ட் மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
மதுரை:

தாமிரபரணி ஆற்றில் இருந்து குளிர்பான ஆலைகளுக்கு தண்ணீர் விநியோகம் செய்வதற்கு எதிராக ஐகோர்ட் மதுரை கிளையில் பிரபாகர் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

அவர் தனது மனுவில், ‘தாமிரபரணி ஆற்றில் இருந்து குளிர்பான ஆலைகளுக்கு தண்ணீர் கொடுப்பதால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. குளிர்பான நிறுவனங்கள் 1000 லிட்டர் தண்ணீருக்கு ரூ.37.50 மட்டுமே கொடுக்கின்றன. இவ்வாறு குறைந்த விலைக்கு தாமிரபரணி தண்ணீரை எடுக்கும் நிறுவனங்கள், குளிர்பானம் மற்றும் குடிநீரை அதிக விலைக்கு விற்பனை செய்கின்றன. எனவே, அந்த நிறுவனங்களுக்கு தாமிரபரணி தண்ணீர் வழங்கப்படுவதை தடை செய்ய வேண்டும்’ என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், குளிர்பான ஆலைகள் தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கு தடை விதித்தனர். எனவே, மறு உத்தரவு வரும் வரையில் குளிர்பான நிறுவனங்கள், தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க முடியாது.

இந்த தீர்ப்பினை வரவேற்றுள்ள மனுதாரர் பிரபாகர், தண்ணீர் மனிதனுக்கு ஜீவாதாரமாக விளங்குவதாகவும், தற்போது ஐகோர்ட் விதித்துள்ள தடையால், 5 மாவட்டத்தின் குடிநீர் பிரச்சினை தீரும் என்றும் தெரிவித்தார். மேலும், குளிர்பான ஆலைகள் கடல்நீரை சுத்திகரித்து குடிநீர் தயாரித்தால் பரவாயில்லை என்றும் அவர் கூறினார்.

Similar News